ஒரு சிறுவன் வீட்டில் படித்து கொண்டு இருக்கிறான். அப்போது வேலைக்கு சென்ற அவன் தந்தை மற்றும் தாய் இரவில் வீடு திரும்பினர். வீட்டிற்கு வந்த அவன் தாய் உணவு சமைத்தார். அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள். தந்தை சாப்பிட அமர்ந்த போது கருகிய ரொட்டியை பரிமாறினார் அவன் தாய். ஆனால் அவன் தந்தை கருகியதை பொருட்படுத்தாமல் ரொட்டியை சாப்பிட்டார். ரொட்டி கருகி விட்டதை சொல்லி வருத்தப்பட்டார் அந்த தாய், அதற்கு அவன் தந்தை “எனக்கு கருகிய ரொட்டி தான் ரொம்ப பிடிக்கும்” என்று கூறிவிட்டு சாப்பிட்டு முடித்தார். இரவு தூங்கும் முன்பு தந்தையிடம் ஆசிர்வாதம் பெற்றுவிட்டு, தயக்கத்துடன் அச்சிறுவன் கேட்டான் “அப்பா உங்களுக்கு உண்மையில் கருகிய ரொட்டிதான் பிடிக்குமா?”. சற்று நேரம் மௌனமாக இருந்த தந்தை கூறினார் “மகனே உன் அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு, நமக்கு பணி விடையும் செய்கிறார். பாவம் களைத்து போயிருப்பாள். ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்த போவதில்லை ஆனால் கடும் வார்த்தைகள் ஒருவர் மனதை காயப்படுத்தும்.
நான் ஒன்றும் உயர்ந்த மனிதன் அல்ல -ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்”. இந்த வரிகள் அச்சிறுவனின் மனதில் ஆழ பதிந்தது. அதை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த அச்சிறுவன் தான் முன்னாள் குடியரசு தலைவர் மற்றும் இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர செய்த விஞ்ஞானி Dr.APJ.அப்துல்கலாம் அவர்கள்.
உயர்ந்த எண்ணங்களே உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது. ஆனால் பெரும்பான்மை மக்கள் என்ன நினைக்கிறார்கள் – உயர்ந்த எண்ணங்களால் என்ன பயன்? உயர்ந்த எண்ணங்களால் என்ன கிடைக்கும்? ஊரார் என்ன நினைப்பார்கள்? இவற்றை எல்லாம் கருதி உயர்ந்த எண்ணங்களை (அறம்) சமரசம் செய்து கொள்கிறோம். ஆனால் நம் எண்ணங்கள் நம்மோடு முடிவதில்லை. நம் எண்ணங்கள் தான் நாளைய தலைமுறைக்கான விதைகள். நம் எண்ணங்கள் மீதான நம்முடைய நம்பிக்கையின் உயரம் தான் – நாளை மரமாக வளரக்கூடிய தலைமுறையின் உயரம்.