வெங்கடேசன்

உப்பு போட்டு சாப்பிடும் புத்தகம் இருந்தால் அது அதிமுக அரசிற்கு எதிரானது – சு.வெங்கடேசன் எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர், CPIM

“சென்னை புத்தகக் காட்சிக்கு வருவது ஒரு கொண்டாட்ட மனநிலை. கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ச்சியாக புத்தகக் காட்சிக்கு வந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு மனவருத்தத்தோடு புத்தகக் காட்சியில் நின்றுகொண்டிருப்பது இதுதான் முதல் முறை.

இதுவரை இல்லாத நடைமுறைகள் இந்த ஆண்டு கொண்டுவரப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. கருப்புச் சட்டை அணிந்தவர்களை விசாரித்து உள்ளே விடுகிறார்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள். இவ்வளவு பயத்தோடா இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இன்றைய சூழலில் பப்பாசி போன்ற அமைப்புக்கு நிறைய நிர்ப்பந்தங்கள் வரலாம். அழுத்தங்கள் வரலாம். அவற்றையெல்லாம் எதிர்கொள்வதற்கு முறையான வழிமுறைகள் உண்டு. அவற்றையெல்லாம் கடந்த வழிமுறைகளை நாம் பின்பற்றக்கூடாது.

குறிப்பாக, கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த ‘மக்கள் செய்தி மையம்’ கடை அகற்றப்பட்டதும், கடையை அகற்ற பப்பாசி அளித்துள்ள அறிக்கையும் இன்று மிகப்பெரிய விவாதத்திற்கு உள்ளாகியிருக்கின்றன, மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றன. “அரசாங்கத்திற்கு எதிரான புத்தகத்தை உங்கள் கடையில் வைத்திருப்பது விதிமீறல்,” என்று பப்பாசி கூறியிருக்கிறது.

அரசுக்கு எதிரான புத்தகங்கள் வைக்கக்கூடாது என்றால் மகாத்மா காந்தியின் ஒரு புத்தகத்தைக் கூட இந்தக் கண்காட்சியில் வைக்கக்கூடாது. அண்ணல் அம்பேத்கரின் ஒரு புத்தகத்தை கூட இந்த கண்காட்சியில் வைக்கக்கூடாது. பேரறிஞர் அண்ணாவின் ஒரு எழுத்தைக் கூட இந்தக் கண்காட்சியில் வைக்ககூடாது.

சமையல் கலை புத்தகத்தைக் கூட வைத்திருக்கக்கூடாது. அதில் வெங்காயத்தைப் பற்றிய குறிப்பு இருக்கும். அது மத்திய அரசுக்கு எதிரானது. உப்புப் போட்டு சாப்பிடுவது பற்றி அந்தப் புத்தகத்தில் இருக்கக்கூடும். அது மாநில அரசுக்கு எதிரானது என்று அவர்கள் சொல்லக்கூடும்.

அரசுக்கு எதிரானது என்று காவல்துறை சொல்லலாம். ஒரு தெருமுனைக் கூட்டத்திற்கு அனுமதி கேட்டால் கூட, அரசை எதிர்த்துப் பேச மாட்டோம் என்று எழுதிக் கொடுங்கள் என்று காவல்துறை கேட்கும். பப்பாசி கேட்கலாமா?

தமிழகத்தில் பதிப்புத் துறைக்கு எவ்வளவு பெரிய மரபு இருக்கிறது! சர்ச்சைக்குரிய புத்தகங்கள் இருக்கக்கூடாது என்றால், இதோ கீழடி இருக்கிறது. அதில் இருக்கிற ஒவ்வொரு பட்டியலும் மத்திய அரசுக்கு எதிரானதுதான். ஏனென்றால் கீழடியைத் தனக்கு எதிரான ஒன்றாகத்தான் மத்திய அரசு கருதுகிறது. அகற்றி விடுவீர்களா கண்காட்சியை?

சமஸ்கிருதம்தான் மூத்த மொழி, தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகள் அதிலிருந்து வந்தவைதான் என்று சொல்கிறார்கள். அதை மறுத்து, கிமு ஆறாம் நூற்றாண்டிலிருந்து வரலாறு இருப்பதை கீழடி கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு படமும் சொல்கிறது. சர்ச்சைக்குரியவை என்று அவற்றை அகற்றிவிட முடியுமா?

புத்தகக் காட்சியை மாண்புமிகு முதலமைச்சர் துவங்கிவைத்தார். அம்பேத்கருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது என்ற மிகப்பெரிய சர்ச்சைக்குரிய, குழப்பான ஸ்டேட்மென்ட்டை துவக்கவிழாவில் அவர் பதிவு செய்தார். என்ன செய்யப்போகிறீர்கள்?

தமிழகத்தின் பதிப்புத் துறைக்கு மிகப்பெரிய வரலாறு, மாண்பு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக பப்பாசி இருக்கிறது. இருக்க வேண்டும். பப்பாசிக்குப் பல நிர்ப்பந்தங்களும் அழுத்தங்களும் இருக்கலாம். அதற்காக கருத்துரிமையை, எழுத்தாளர் உரிமையை, கருத்துச் சுதந்திரத்தைக் காவு கொடுக்க முடியாது.

எனவே, இந்த நிகழ்வுக்கு எதிராக எனது கருத்தைப் பதிவு செய்து, இங்கு எனக்கு அளிக்கப்பட்ட “கீழடி ஈரடி” என்ற தலைப்பிலான உரையை நான் நிகழ்த்தப்போவதில்லை என்று தெரிவித்து அமர்கிறேன்.”

-தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் சென்னை புத்தகக் காட்சி கருத்தரங்க மேடையில், “கீழடி ஈரடி” என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினரும் கீழடி மீட்புப் போராளியுமான சு. வெங்கடேசன் உணர்வுரை ஆற்றினார்.

-seithikkural

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *