வெளிநாடு, பிற மாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்த 86 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதிக்கு வெளிநாடு, பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்த 86 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை நடத்திய ஆய்வில், பிற மாவட்டங்களில் இருந்து வந்த 42 பேரை கண்டறிந்து அவரவர் இல்லங்களில் தனிமைப்படுத்தினர். மேலும், அவர்களது மாதிரியை எடுக்க சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபோல, வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்த 32 பேரை கோவில்பட்டியில் உள்ள கல்லூரி முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களது சளி மாதிரியை எடுக்க சுகாதாரத் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுபோல, கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதியில் வட்டாட்சியர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை நடத்திய ஆய்வில், பிற மாவட்டங்களில் இருந்து வந்த 11 பேரை கண்டறிந்து அவரவர் இல்லங்களில் தனிமைப்படுத்தினர். மேலும் அவர்களது வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. தொடர்ந்து, அவர்களது மாதிரியை எடுக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.