போலி இபாஸ் மூலம் வருபவர்களை தடுப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட எல்கை பகுதிகளில் கியூஆர் ஸ்கேனர் வசதி அறிமுகம் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

போலி இபாஸ் மூலம் வருபவர்களை தடுப்பதற்காக மாவட்ட எல்கை பகுதிகளில் க்யூஆர் ஸ்கேனர் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது இத்தகவலை தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில இன்று ( 15.6.2020) செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 16,536 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 398 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 3 பேர் இறந்துள்ளனர். 316 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இன்று (15.6.2020) மதியம் 12 மணி நிலவரப்படி 95 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 20பேருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது.

மகராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து 398 பேர் தூத்துக்குடி வந்துள்ளனர். இதில் 185 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். கடந்த 2 வார காலத்தில் துக்கவீடு, திருமண வீட்டிற்கு வந்தவர்கள் மூலம் 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தென்திருப்பேரை, காயல்பட்டணம் ஆகிய பகுதிக்கு அதிகம் பேர் வந்துள்ளனர். இவர்களுடன் நேரடி தொடர்புடைய 50 பேருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே 4 முதல் 3568 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்துள்ளனர். இதில் மகராஷ்ட்ராவில் இருந்து மட்டும் 2685 பேர் வந்துள்ளனர். இதில் 158பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து மே 4 முதல் இன்று வரை 8396 பேர் வந்துள்ளனர். விமானம் மூலம் மற்ற மாவட்டங்களில இருந்து சுமார் 16,000 பேர் தூத்துக்குடி வந்துள்ளனர். கோவில்பட்டியைச் சேர்ந்த ஒரு நபருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்தது, இதனால் 3 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடியில் சளி மாதிரி பரிசோதனை செய்ய ஏற்கனவே ஒரு எந்திரம் உள்ள நிலையில், ரூ.15 லட்சம் செலவில் மேலும் ஒரு எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவுகிறது. வெளி மாவட்டங்களில் பைக்குகளில் வரும் சில நபர்கள் சோதனை சாவடியில் சோதனைக்கு உட்படாமல் ரகசியமாக ஊருக்குள் நுழைந்து விடுகின்றனர். இதனால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் புதிதாக வந்த நபர்கள் குறித்து காவல்துறைக்கோ, சுகாதார துறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து மாஸ்க் அணிய வேண்டும், பொது இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தூத்துக்குடி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் 1500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. திருச்செந்தூர், விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 3 இடங்களில் தனிமைப்படுத்தும் மையம் தயார் நிலையில் உள்ளது. போலி இபாஸ் மூலம் வருபவர்களை தடுப்பதற்காக மாவட்ட எல்கை பகுதிகளில் கியூஆர் ஸ்கேனர் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்கேன் செய்யும்போது போலி எனத் தெரியவந்தால் சம்பந்தபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் என ஆட்சியர் தெரிவித்தார்.