தூத்துக்குடி கொரோனா வைரஸ் காய்ச்சல் சந்தேகங்களை தீர்க்க இலவச தொலைபேசி எண் அறிமுகம் – ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

உயிர்கொல்லி நோயாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நாட்டில் உள்ள பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என்றும், பொதுமக்கள் சுய ஊரடங்கு உத்தரவுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், கூடுதல் ஆட்சியர் விஷ்ணுசந்திரன், சார் ஆட்சியர் சிம்ரன் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வணிக நிறுவனங்கள், கோவில்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரானோ வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றை வருகிற 31-ஆம் தேதி வரை மூட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கோவில்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்களிலும் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் குறைந்த காய்ச்சல் பரவுவது குறித்து சமூக வலைதளங்களில் வரும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வைரஸ் தொற்று குறித்த மக்களுக்கு ஏற்படும் பயங்கள் மற்றும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் 0461-2340101 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான முகக் கவசங்கள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மலிவு விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கும்படி விற்பனைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையை பயன்படுத்தி தற்காப்புக் கவசங்கள் போன்றவற்றை யாராவது அதிக விலைக்கு விற்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் புகார் வர பெற்றாலும் அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டில் இருந்து தூத்துக்குடி திரும்பிய 79 பேர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர் என்றார்.