தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்றைய பேட்டி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இன்று (07.07.2020) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 32,300 மாதிரிகள் பரிசோதனை செய்ததில் 1,271 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 401 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினம்தோறும் 40 முதல் 50 நபர்கள் வரை பூரணம் குணம் பெற்று வீடு திரும்புகிறார்கள். நேற்றைய தினம் திரேஸ்புரம் பகுதியில் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ள நபர்கள் கண்டறியப்பட்டு 200 மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இதில் 40 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும், திரேஸ்புரம் தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மாநகராட்சி மூலம் வீடு, வீடாக சென்று தெர்மல் ஸ்கிரினிங் மற்றும் பல்சஸ் பரிசோதனை செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் விளாத்திக்குளம், கோவில்பட்டி, காயல்பட்டணம் நகராட்சி பகுதியில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் அறிவிக்கப்பட்டு, மேலும் நோய் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக 600 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தாலுகா அளவில் உள்ள மருத்துவமனைகளில் 400 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் கோவில்பட்டி வட்டத்தில் 150 படுக்கைகள் தற்போது உள்ளது. மேலும் கூடுதலாக 100 படுக்கைகள் தயார் செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அவசிய வேலைக்கு வெளியில் செல்லும்போது சமூக இடைவெளி கட்டாயமாக பின்பற்றுவதோடு முககவசங்களை அணிய வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் கரோனா தொற்று பணிகளுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் பொதுமக்களின் அவசியம் மிகவும் முக்கியமானது. தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் நவீன தானியங்கி ஆர்என்ஏ பிரித்தெடுக்கும் கருவி மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டதால் நமது மாவட்டத்தில் தினம்தோறும் 500 மாதிரிகள் பரிசோதனை செய்து வந்த நிலையில் தற்போது சுமார் 1,200 மாதிரிகள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 7 இடங்களிலும், கோவில்பட்டி நகராட்சி பகுதியில் 3 இடங்களிலும் கொரோனா தொற்று காய்ச்சல் பரிசோதனை மையம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு விரைவாக காய்ச்சல் பரிசோதனை செய்து கொரோனா தொற்று உள்ள நபர்களை எளிதாக கண்டறியபடுகிறது.

பொதுமக்கள் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதப்படுதாமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நமது மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் பயண விவரங்கள் அல்லது திருமணம், இறுதி சடங்கு கலந்துகொண்ட போன்ற விவரங்களை கண்டறியபடுவதால் சமூக பரவல் இல்லை என்ற நிலை மாவட்ட நிர்வாகத்தால் தீவிரமாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.