தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் ஏற்கனவே 28 நபர்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். சிகிச்சை பலன் இன்றி 2 பேர் இறந்து உள்ளனர். மீதம் உள்ள 40 பேரில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 37 பேரும், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 2 பேரும், மதுரையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் 9 இடங்களில் தனிமைப்படுத்தும் முகாம்கள் உள்ளன. வெளி மாநிலத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருபவர்களுக்கு மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. அவர்களுக்காக 700 பேர் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி ஆகியவற்றை வழங்கும் பணிகளில் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.