ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்க கருவி – மதுரை மாவட்டம்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்க இதுவரை கருவி கண்டுபிடிக்காததால் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 5 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டு மீட்புப்பணி தோல்வி அடைந்தது. இதன் காரணமாக ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்க கருவி கண்டுபிடித்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ரெங்கசாமிபுரத்தை சேர்ந்த அறிவியல் மாணவர் முருகன் என்பவர், ஆழ்துளை கிணற்றிலிருந்து எளிய முறையில் குழந்தையை மீட்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவி மூலம் மிக எளிதில் குழந்தையை அரை மணி நேரத்தில் வெளியே எடுத்துவிடலாம். இந்த கருவியை செய்வது மிகவும் எளிது என்றும் முருகன் பேட்டி அளித்துள்ளர்.

செய்முறை விளக்கத்திற்காக பொம்மையை குழிக்குள் இறக்கி கருவி மூலம் தூக்கி அனைவரையும் அசர வைத்தார். இந்த கருவியை செய்ய வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த கருவியை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால் அவருக்கு ரூ.5 லட்சம் பரிசு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு இந்த கருவியை ஆய்வு செய்து அந்த இளைஞருக்குரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.