தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன்முதலாக மாரடைப்பிற்கான இருதய மேற்சிகிச்சை (Angioplasty) தொடங்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினந்தோறும் நான்கு முதல் ஆறு வரை இருதய மாரடைப்பு நோயாளிகள் வருகிறார்கள், அவர்களுக்கு குறித்த நேரத்தில் அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மேற்சிகிச்சைக்காக Cath Lab ஆய்வகம் (இரத்த நுண்குழாய் ஆய்வகம்) ஏற்படுத்தி தர அரசிடம் கோரப்பட்டது. அதனை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஏற்றுக்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்களால், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரங்கள் துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு அவர்கள் முன்னிலையில் 3.6 கோடி ரூபாய் மதிப்பிலான Cath Lab ஆய்வகம் (Philips FD 10 Flat Panel) 22.02.2020 அன்று திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து Coronary Angiogram பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தது. அதில் கண்டறியப்பட்ட இரத்த குழாய் அடைப்பு சரிசெய்யும் பொருட்டு Angioplasty சிகிச்சையான (PTCA) கடந்த 27.06.2020 சனிக்கிழமை அன்று ஒரே நாளில் 4 நோயாளிகளுக்கு வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. அந்த நோயாளிகள் குணமடைந்து இன்று வீடு திரும்புகிறார்கள். மேலும் தனியார் மருத்துவமனையில் இரண்டு முதல் மூன்று இலட்சம் மதிப்பிலான இந்த சிகிச்சை முறை அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது. இச்சிகிச்சை முதல்வர் Dr. ரேவதி பாலன் அவர்கள் தலைமையில், மருத்துவத்துறை தலைவர் Dr. இளங்கோ , Dr. சரவணன் முன்னிலையில் இருதய சிகிச்சை மருத்துவர்கள் Dr. பாலமுருகன், Dr. கணேசன், Dr. ஆனந்தராஜன், Dr. கார்த்திக் மற்றும் மயக்கவியல் துறை Dr. பல ராமகிருஷ்ணன், D.சுகிர்தராஜ் ஆகியோர்களால் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. மேலும் இம்மருத்துவமனையில் உறைவிட மருத்துவர் Dr. சைலஸ் ஜெயசீலன் மற்றும் ARMO Dr. ஜெயபாண்டியன் இதற்கு துணை இருந்தார்.