மே 3-ம் தேதி இந்திய ராணுவம் மருத்துவமனைகள் மீது மலர் தூவுகிறது

கொரோனா தடுப்பு பணியில் உள்ள தூய்மை பணியாளர்களை கவுரவப்படுத்தும் வகையில் மே 3-ம் தேதி மருத்துவமனைகள் மீது மலர் தூவப்படும் என முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தளபதி பதூரியா மற்றும் கடற்படை தளபதி ஆகியோர் நேற்று மாலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியதாவது:

கொரோனா தடுப்பில் ஈடுபட்டவர்களை ஆயுதப்படைகள் சார்பில் கவுரவப்படுத்தும் விதமாக மே 3-ம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விமானப்படை விமானங்கள் பறந்து மருத்துவமனைகள் மீது மலர் தூவும். கடற்படை சார்பில் கடலில் கப்பல்கள் அணிவகுப்பு நடத்தப்படும். கடற்படை விமானங்களும், மருத்துவமனைகள் மீது மலர் தூவும்.

ராணுவம் சார்பில் அணிவகுப்பு பேண்ட் வாத்திய இசைநிகழ்ச்சி நடத்தப்படும். மாவட்டங்களில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் முன்பு ராணுவம் சார்பில் இசை நிகழ்ச்சி நடத்தப்படும். போலீஸ் நினைவிடத்தில் பாதுகாப்பு படை சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும்.” என தெரிவித்துள்ளார்.