சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோண் பிறந்த நாள் விழா : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோண் பிறந்தநாளை முன்னிட்டு கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோண் மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோண் பிறந்தநாள் வரும் 11 ம் தேதி அன்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் பல்வேறு அமைப்புகளும் வருகை தந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திட அனுமதிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு சுய ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் மட்டும் கலந்துகொண்டு மாலை அணிவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்களின் நலன் கருதியும், கொரானோ வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும் பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோண் பிறந்தநாளை முன்னிட்டு 11.07.2020 (சனிக்கிழமை) கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோண் மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மட்டும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

பொதுமக்கள் அதிகமாக கூடாத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோண் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் உள்ள மணிமண்டபத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும், வெளி மாவட்டத்தில் இருந்தும் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை. என்பதையும் இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.