சில்லரை வர்த்தகத்தை ஒழிப்பதையே வருமானவரித்துறை,உணவு பாதுகாப்புத்துறையினர் குறிக்கோளாக வைத்துள்ளனர் என வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தூத்துக்குடியில் பேட்டியின் போது கூறினார்.
தூத்துக்குடி மத்திய சங்க வியாபாரிகள் அலுவலகத்தில் வைத்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறியதாவது, வரும் மே 5 ம் தேதி சென்னை தீவுத்திடலில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அடிமை பொருளாதார எதிர்ப்பு மாநாடு சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ளது.சில்லறை வணிகத்தில் 100 சதவீதம் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனம் தமிழக பொருளாதாரத்தை கொள்ளையடித்து செல்கின்றனர். மேலும் மத்திய அரசு ஜிஎஸ்டி வரிவிதிப்பு அதற்கு அபராதம் இந்த வகையில் நாட்டின் பொருளாதாரம் சரிந்து விட்டது. உலக வர்த்தக ஒப்பந்தத்தை காங்கிரஸ் கட்சி தான் ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி வெளிநாட்டிற்கு கதவை திறந்து விட்டது. ஆனால் பாஜக அந்த கதவை பிடுங்கி எறிந்து விட்டது. சாலை விரிவாக்கம், ஸ்மார்ட் சிட்டி என அனைத்துமே உள் நாட்டு வணிகத்தை அழிக்கும் திட்டமே. இதற்கு ஒரே தீர்வு காந்தி கண்ட சுதேசி இயக்கம் தான்.
வணிகர்களின் ஒற்றுமையும், பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் வெளிநாட்டு வர்த்தகத்தை முழுவதும் தடுத்து விடலாம். உலக நாடுகள் இந்தியாவை சந்தையாக மாற்றுகிறது. ஆகவே நாம் வெளிநாட்டு பொருட்களை தவிர்க்க வேண்டும். வருமானவரித்துறை, உணவு பாதுகாப்புத்துறையாக இருந்தாலும் சில்லரை வர்த்தகத்தை ஒழிப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளனர். இது குறித்து மாநில அரசிடம் முறையிட்டுள்ளோம் என அவர் தெரிவித்தார். பேட்டியின் போது வணிகர் சங்க நிர்வாகிகள் பழரசம் விநாயகமூர்த்தி, செந்தில் ஆறுமுகம், பாஸ்கர், தெர்மல்ராஜா உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.