வாடகைக்கு கார் எடுத்து செல்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று…

திருச்செந்தூரில் சாமி கும்பிட்டுவிட்டு தஞ்சாவூர் திரும்பிய கார் விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலி. காரணம் டிரைவரின் தூக்க கலக்கம்.

இதை பற்றி ஒருவர் வெளியிட்ட அனுபவம்: இதே போல் இரண்டு வருடங்கள் முன்பு இதே திருச்செந்தூரில் நான் போயிருந்தபோது தஞ்சாவூரை சேர்ந்த ஒரு குடும்பம் வந்து சாமி கும்பிட்டுவிட்டு மறுநாள் தஞ்சாவூர் புறப்பட தயாராகிக்கொண்டிருந்தார்கள் . அவர்கள் ஹோட்டல் அறையிலும் டிரைவர் கீழே காரை துடைத்துக் கொண்டும் இருந்தார் . நான் டிரைவரிடம் பேச்சுக்கொடுத்தேன் .எந்த ஊர் என்று கேட்டபோது நானும் டிரைவர் என்பதால் சகஜமாக பேச தொடங்கினார்.,”நாங்கள் தஞ்சாவூர் போகனும் நேற்று இரவு என்னை காரில் படுக்கசொல்லிவிட்டு அவர்கள் ஹோட்டலில் தங்கிவிட்டார்கள் .

கொசுக்கடி காரணம் ஒருநிமிடம் கூட நான் தூங்கவில்லை இப்பவே எனக்கு கண்ணை கட்டுது எப்படி நான் தஞ்சாவூர் வரை போகப்போகிறேனென்று எனக்கு தெரியவில்லை” என்றார்.

தொன்னூறு சதவீதம் வாடகைக்கு கார் எடுத்து செல்பவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள் ஹோட்டலில் ரூம் வேண்டும் என்ற கட்டாயம் எந்த டிரைவரும் கேட்பதில்லை. அங்குள்ள செக்யூரிட்டியிடம் சொல்லி ஒரு ஐம்பதோ நூறு ரூபாயோ கொடுத்தால் அவர் ஒரு பெஞ்சோ ஒரு ஃபேன் உள்ள அறை ஏதாவது ஏற்பாடு செய்து கொடுப்பார் .

அதை செய்யாமல் டிரைவரை பெருவெளியில் விட்டு சென்றுவிடுகிறார்கள். எங்கு தங்கினாலும் டிரைவர் நல்லா தூங்கினாரா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நூறு ரூபாய் செலவை பார்த்தால் அது எல்லோருக்கும் ஆபத்து அநியாயமாக ஒரே குடும்பத்தில் ஐந்து உயிர்கள் நேற்று போய் விட்டது.