குடும்பத்தின் மூத்த மகனாக இருந்து உதவி செய்வேன் – சரத்குமார் ஆறுதல்!

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய சமக தலைவர் சரத்குமார், நான் தங்கள் குடும்பத்தின் மூத்த மகனாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்வேன் என ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு விதிககளை மீறி கடை திறந்ததாக கூறி போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்க்பபட்ட பின்னர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்பட 5 காவல்துறையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றிருக்கிறார்கள்.

இந்நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இன்று (4.7.2020) சாத்தான்குளம் வந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக அவர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறுகையில் ,

இந்த துயரமான சம்பவம் நடந்திருக்க கூடாது. நம்ம எல்லாரையும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டது. இந்த சம்பவம் குறித்து ஆரம்பத்திலிருந்தே நான் கவனித்து வருகிறேன். நான் இந்த குடும்பத்தில் மூத்த மகனாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன்.

அந்த வகையில் தற்போதைய செலவிற்காக ரூ.5 லட்சம் ருபாய் தந்திருக்கிறேன். இதுவரை சட்ட ரீதியான உங்களின் அனுகுமுறையை நான் பார்க்கிறேன். அது சரியாகத்தான் தெரிகிறது. தவறு செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. அதன்மூலம் நிச்சயமாக நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது’’ என்றார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசியபொழுது :தவறு செய்தவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும். அது கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது” என்றார். இந்த ஆறுதல் கூறும் நிகழ்விற்கு ,கட்சியின் துணைபொதுச் செயலாளர் சுந்தர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன், மத்திய மாவட்ட செயலாளர் வில்சன், மற்றும் சமக நிர்வாகிகள் உடன் சென்றனர்.