தோட்டக்கலைத்துறை மூலம் பல்வேறு பயிர் வகைகளுக்கு மானியம் – மாவட்ட ஆட்சியர் தகவல்!

தோட்டக்கலைத்துறையின் மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு பயிர் வகைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறி மற்றும் பழப்பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை மூலம் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் 2020-2021 ஆம் ஆண்டிற்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 59 இலட்சங்கள் உத்தேச இலக்கு பெறப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை முறையில் வெண்டை, கத்தரி மற்றும் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.3,750/- வீதம் 90 ஹெக்டேருக்கும், சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரி சாகுபடிக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000/- வீதம் 125 ஹெக்டேருக்கும் சலுகைகள் வழங்கப்பட உள்ளன.

மேலும், பந்தல் அமைத்து காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, பந்தல் அமைக்க ஒரு ஹெக்டேருக்கு 2 இலட்சம் வீதம் 5 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படும்.

மேலும் வாழைகளுக்கு முட்டுக் கொடுப்பதற்காக ஒரு ஹெக்டேருக்கு ரூ.25,000/- வீதம் 10 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படும். அங்கக வேளாண்மை சான்றிதழ் பெற ஒரு விவசாயிக்கு ரூ.500/- வீதம் 3800 விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இத்திட்டங்களில் முதலில் அணுகுபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப் பயிர்களை அடங்கலில் பதிவு செய்வதுடன்,

குடும்ப அட்டை நகல், அடங்கல், கணினி சிட்டா, புகைப்படம் -10 எண்கள் ஆதார் அடையாள அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் அனுபோகச் சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகில்உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகலாம்.

மேலும்TNHORTNET என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.