ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு வரலாறும், தமிழகத்தில் துள்ளி எழுந்த காளையர்களும்!!!

பொங்கல் விழா என்றாலே ”ஜல்லிக்கட்டு” என்ற காளை விளையாட்டுடன் ஒன்றிணைந்தது. காளைகளை அடக்கும் நம் காளையர்களைக் காண மதுரையே விழாக் கோலத்தில் இருக்கும். திருச்சி, திண்டுக்கல், கோவை, புதுக்கோட்டை என்று ஜல்லிக்கட்டு நடந்தாலும், மதுரையில் நடக்கும் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கள்தான் மிகவும் பிரபலமானவை.

”ஏறுதழுவுதல்” என்பதே இதன் அழகான வார்த்தையாகும். காலப்போக்கில் ஜல்லிக்கட்டு என்று மறுவியதாக கூறப்படுகிறது. அதாவது, ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில் இருந்தே, அவர்களது நாணயங்களான சல்லிக் காசுகளை ஒரு துணியில் முடிந்து காலையின் கொம்பில் கட்டிவிடுவார்கள். காளையை அடக்குபவர்கள் அந்தக் காலையின் கொம்பில் கட்டப்பட்டு இருக்கும் சல்லிகாசை எடுத்துக் கொள்ளலாம். இதுவே பின்னாட்களில் ஜல்லிக்கட்டு என்று மறுவியதாக கூறப்படுகிறது.

இந்த ஜல்லிகட்டு விளையாட்டு மூன்று வகைகளாக பிரிக்கலாம். வாடி மஞ்சு விரட்டு என்பது ஒரு திறப்பின் வழியாக வெளியேவரும் காளையை பிடித்துக் கொண்டு குறிப்பிட்ட தூரம் வரை செல்ல வேண்டும். அதன் பிடியை விடக் கூடாது. மதுரையின் பாலமேட்டில் இந்த மாதிரியான ஜல்லிக்கட்டு விளையாட்டு பிரபலம்.

மதுரை, சிவகங்கையில் பிரபலமான இன்னொருவகை காளை விளையாட்டு ‘வெளிவிரட்டாகும்’. இதில் காளை திறந்த மைதானத்துக்குள் அனுப்பப்படும். காளை கயிறால் கட்டப்படுவதோ, குறிப்பிட்ட பாதையில்தான் செல்லவேண்டுமென்ற நிபந்தனையோ இருக்காது.

வட்டம் மஞ்சுவிரட்டு என்பது மற்றொரு வகை. காளை அடக்கும் போட்டியாகும். இதில் வட்டம் என்ற சொல் கயிறைக் குறிக்கும். 15 மீட்டர் நீளமுள்ள கயிறால் காளை கட்டப்பட்டிருக்கும். 30 நிமிடத்துக்குள் ஏழு அல்லது ஒன்பது பேர் காளையை அடக்க முயல்வர். இவ்விளையாட்டில் பார்வையாளர்களுக்கு எந்த ஆபத்தும் நேர்வதில்லை.

ஜல்லிக்கட்டு நடத்த என்ன செய்ய வேண்டும்:

இந்தப் போட்டியை நடத்துவதற்கு ஒரு மாதம் முன்பாகவே மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும்.

* காளைகளும் மாடுபிடி வீரர்களும் முறையாக பதிவு செய்ய வேண்டும்.

* காளைகளின் பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடி தூவுதல், சேறு சகதிபூசி வெறியூட்டுதல் கூடாது.

* ஒரு காளையை ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு மேல் அடக்கக்கூடாது. காளையை வாலைப்பிடித்து திருகுவதோ வேறுவிதமான கருவிகளைக் கொண்டு துன்புறுத்துவதோ கூடாது.

* காளைகள் ஓடவும் வீரர்கள் அடக்கவும் களத்தில் போதிய இடவசதி இருக்கவேண்டும் போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

எப்போது, ஏன் தடை விதிக்கப்பட்டது:

கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை விதித்தது. 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு, ஜல்லிக்கட்டை கட்டுபாடுகளுடன் நடத்த அனுமதி அளித்தது.

2008 ஜனவரி மாதம் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. 2009 ஜூலை மாதம் ஜல்லிக்கட்டு நடத்த விதிமுறைகள் வகுத்து தமிழக சட்டப் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.

2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனவரி 15 முதல், 5 மாதங்கள் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. 2011 மார்ச் மாதம் வாடி வாசல்களை அகலப்படுத்துதல் உள்ளிட்ட நிபந்தனைகளோடு ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது.

2011 ஏப்ரல் மாதம் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்தது. 2011 ஜூலை மாதம் ஜல்லிக்கட்டு காளைகளை ‘விலங்குகள் காட்சிப்படுத்துதல்’ பட்டியலில் இணைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

2012 ஜனவரி மாதம் மதுரை, சிவகங்கை, திருச்சி உட்பட 8 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது.

2013 அக்டோபர் மாதம் மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது.

2014ம் ஆண்டு மே 7-ந் தேதி, காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், காட்சிபடுத்துதல் பட்டியலில் காளைகள் இருப்பதால் அனுமதிக்க முடியாது என்று விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் நிரந்தர தடை விதித்து தீர்ப்பளித்தது.

இதன் காரணமாக கடந்த 2015, 2016ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஜல்லிகட்டு நடைபெறவில்லை. தொடர்ந்து தமிழக மக்கள் வலியுறுத்தியும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தால்தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க முடியும் என்று மத்திய அரசு கைவிரித்து வருகிறது.

நடப்பாண்டில் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் பன்னீர் செல்வமும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும். தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் கட்டிகாக்கப்படும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 2009-ல் திமுக கொண்டு வந்த பிராணிகள் வதை தடுப்பு சட்டத்திற்கு முரணானது என்று கூறி உயர்நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்தது. ஆதலால், மாநில அரசால் சட்டத்தை திருத்த முடியாது” என்று அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் காவிரியின் உரிமைக்கு திரளாத தமிழக காளையர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இணைந்து இருப்பது, இந்த விளையாட்டின் மீது தமிழக இளைஞர்களுக்கு எந்தளவிற்கு ஆர்வம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மற்றும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கொடுமையின்போதுதான் இதுபோன்று இளைஞர்கள் திரண்டு இருந்தனர். தற்போது ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக திரண்டுள்ளனர்.

-samayam