தூத்துக்குடி மாவட்டத்தில் 86 போலீசார் புதிதாக தேர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 86 போலீசார் நேரடியாக கரோனா பாதுகாப்பு பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 2-ம் நிலை போலீசார், சிறைக்காவலர்கள், தீயணைப்பு துறை காவலர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்து 888 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான உடற்கூறு தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவை முடிந்து உள்ளது. இவர்களுக்கு கடந்த மாதம் 2-ந் தேதி பயிற்சி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கரோனா பிரச்சினை காரணமாக பயிற்சி தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் தேர்ச்சி பெற்ற அனைவரும் பயிற்சிக்கு அழைக்கப்படாமல் நேரடியாக கரோனா பாதுகாப்பு பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். இதனால் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அந்தந்த மாவட்ட எஸ்பி முன்னிலையில் ஆஜராகி, அவர்களிடம் இருந்து பணி ஆணையை பெற்றுக் கொள்கின்றனர். அவர்கள், அங்கு நடக்கும் சிறு அடிப்படை பயிற்சிக்கு பிறகு உடனடியாக கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிக்கு பிரித்து அனுப்பப்படுகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 86 பேர் உள்பட நெல்லை சரகத்தில் 318 பேர் நாளை மறுநாள் பணியில் சேருகின்றனர்.

Credits : tuty online