ஊரடங்கு உத்தரவினால் அடித்தட்டு மக்கள் முதல் அனைத்துப் பிரிவினருமே பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். கொரோனா பரவலுக்குப்பின் யாரும் வீட்டைவிட்டு வெளியில் போகமுடியாத சூழலில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா எட்டயபுரத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இராமனூத்து கிராமத்தில் 250 வீடுகள் உள்ளன. அனைவருக்கும் விவசாயம் மட்டுமே முக்கியத் தொழில். இதில் சொந்த நிலம் இல்லாத 25 குடும்பத்தினர் மற்றவர்களின் வயல்களில் கூலி வேலை செய்துதான் பிழைத்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் சமைத்துச் சாப்பிடுவதற்குக்கூட இந்த 25 குடும்பத்தினரும் பெரும் சிரமங்களை இராமனூத்து கிராம அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் மு.க.இப்ராஹிம் தனது பள்ளி மாணவர்கள் மூலம் தெரிந்துகொண்டார். அவர், இராமனூத்து கிராமத்தில் உள்ள 25 ஏழைக் குடும்பங்களுக்குத் தலா 600 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருள்களை தனது சொந்தச் செலவில் சமூக விலகலைக் கடைப்பிடித்து வீடு வீடாக நேரில் சென்று வழங்கி வந்துள்ளார்.
மு.க.இப்ராஹிம், தமிழில் வெளிவரும் முன்னணி இதழ்களில் சிறுவர்களுக்கான புத்தகங்களும் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டாரக் கிளையின் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
எழுத்தறிவிப்பது மட்டுமல்ல இதுபோன்ற இன்னல்களில் உதவிக்கரம் நீட்டுவதும் சமூக அக்கறையாளர்களின் கடமை என்பதை நிரூபித்துள்ள மு.க.இப்ரஹாமிற்கு ஏராளமான பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.