‘2 கொலைகளுக்கும் அரசு பொறுப்பேற்க வேண்டும்’- உதயநிதி ஸ்டாலின்

சாத்தான்குளத்தில் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்த தந்தை மகன் ஜெயராஜ் – பெனிக்ஸ் குடும்பத்தினரை இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காவல்துறை அதிகாரிகள் செய்த இந்த 2 கொலைகளுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.

சாத்தான்குளத்தில் ஜூன் 22ம் தேதி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகன் ஜெயராஜ் – பெனிக்ஸ் இருவரும் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் அதனால் அவர்கள் நீதிமன்ற காவலில் உயிரிழந்ததாகவும் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். முதல்வர் பழனிசாமி உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.
இந்த சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி நேரில் சென்று அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.

இந்த நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சாத்தான்குளத்திற்கு நேரில் சென்று உயிரிழந்தந்த ஜெயராஜ், பெனிக்ஸ் குடும்பத்தினரை சந்தித்து தனது இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

“காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பெனிக்ஸ் 2 பேருக்கும் என்ன நடந்தது என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காவல்துறையை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக தலைவர் அறிவுறுத்தலின் பேரில் அவர்களுடைய குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டிருக்கிறது. இறந்தவர்கள் குடும்பத்தை சந்தித்து இளைஞரணி சார்பில் என்னுடைய இரங்கலை தெரிவித்தேன்.

அவர்கள் சொல்கிற விஷயங்களைக் கேட்கிறபோது ரொம்ப பயமாகவும் பதட்டமாகவும் இருக்கிறது.
அவர்களுக்கு தேவை நியாம். நீதி கிடைக்க வேண்டும். பாவம் அவர்கள் அப்பாவிகள். அவர்களைப் பற்றி இந்த ஊரில் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் அவர்கள் ரொம்ப சாத்தமானவர்கள், ஒழுக்கமானவர்கள் என்று சொல்வார்கள். யாரும் அவர்களைப் பற்றி தப்பாக சொல்ல மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துக்கொண்டு போய் கண்மூடித் தனமாக தாக்கி கொலை செய்திருக்கிறார்கள். இந்த கொலைகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.

இன்னும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியே வரவில்லை. அப்படி பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளிவராத பட்சத்தில், முதல்வர், உயிரிழந்த ஜெயராஜ் மூச்சுத் திணறலாலும் பெனிக்ஸ் உடல்நலக் குறைவாலும் இறந்துவிட்டதாக சொல்கிறார். இதை முதல்வர் எந்த அடிப்படையில் சொல்கிறார் என்று தெரியவில்லை. கண்டிப்பாக கொலை நடந்திருக்கிறது. அந்த அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.இதை சும்மா விடக் கூடாது. இது போல ஒரு மரணம் இனிமேல் நடக்க கூடாது. இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்றால் திமுக சார்பில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்படும்.

இந்த நேரத்தில், இந்த குடும்பத்திற்கு என்ன சொல்கிறேன் என்றால் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். திமுக சட்டப்படி உங்களுக்கு துணை நிற்கும்.
டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டுவிட்டு ஒரு பாதுகாப்பு இல்லை. நேற்று கூட சிவகங்கையில் முகக்கவசம் கூட அணியாமல் நிற்கிறார்கள். அங்கே பாதுகாப்புக்கு ஒரு போலீஸ் கிடையாது. ஆனால், இந்த மாதிரி அப்பாவிகளை தாக்குகிறார்கள்.

இதே போல, கோயம்புத்தூரில் ஒரு சிறுவனை ரோட்டில் போட்டு தாக்கியிருக்கிறார்கள். ரொம்ப மோசமாக போய்க்கொண்டிருக்கிறார்கள்.
காவல்துறை அதிகாரிகள் தயவு செய்து பொதுமக்களிடம் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளுங்கள். இது ஊரடங்கு காலம். வியாபாரிகள் 3 மாதமாக கடைகளை மூடி வைத்துள்ளார்கள். வணிகர்களுக்கு திமுக எப்போதும் துணை நிற்கும்.” இவ்வாறு உதயநிதி கூறினார்.