புனிதவெள்ளி வழிபாடு: கிறிஸ்தவர்கள் வீடுகளில் பிரார்த்தனை

உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களின் வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது ஏசு கிறிஸ்து பாடுபட்டு மரணம் அடைந்ததை நினைவு கூறும் தவக்கால வழிபாடு ஆகும். ஏசு சிலுவையில் உயிர் துறந்த புனித வெள்ளி வழிபாடு மிகவும் முக்கியமானது. இந்த நாளில் அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெறும். சி.எஸ்.ஐ. உள்ளிட்ட பிற ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 
இதனால் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் மூடப்பட்டு உள்ளதால் கிறிஸ்தவர்கள் நேற்று புனித வெள்ளி வழிபாடுகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அனைத்து தேவாலயங்களிலும் பங்குதந்தைகள் மட்டும் பங்கேற்று புனிதவெள்ளி வழிபாடுகளை நடத்தினர்.

தூத்துக்குடி சின்னக்கோவிலில் பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனையில் ஆலய பங்குதந்தைகள் மட்டும் கலந்து கொண்டனர். வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) நள்ளிரவில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஈஸ்டர் வழிபாடும் நடைபெறாது. மக்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.