அடுத்த மூன்று மாதங்களுக்கு கேஸ் சிலிண்டர் இலவசம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. மத்திய அரசு ஏற்கனவே சமையல் சிலிண்டரின் விலை ரூபாய் 65 குறைக்கப்படும் என தகவல் அளித்துள்ள நிலையில் தற்போது பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச சமையல் சிலிண்டர் அளிக்கும் திட்டம் ஒன்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனம் சற்று முன் வெளியிட்ட அறிவிப்பின்படி அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்றும், சிலிண்டர்களை பெறும் மக்கள் வழக்கம்போல் சிலிண்டர் நிறுவனங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் அதன்பின் அவர்களது வங்கிக்கணக்கில் அவர் செலுத்திய பணம் முழுமையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் ஏழை எளிய மக்கள் மிகவும் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் பயனாளிகள் மூன்று மாதங்களில் சுமார் 90 லட்சம் இலவச சிலிண்டர்களை பெற வாய்ப்பு உள்ளது என கூறுகின்றனர்.