கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் ஜூன் 22 முதல் ஒரு வாரத்துக்கு கடை அடைப்பு : தாசில்தார் உத்தரவு!!

செய்துங்கநல்லூரில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் ஜூன் 22 முதல் ஒரு வார காலத்திற்கு கடைகளை அடைக்க தாசில்தார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஜீன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் செய்துங்கநல்லூரில் மீன் விற்பனை செய்தவர், டெய்லர் என பரவலாக கொரோனா தொற்று பரவ ஆரம்பித்து விட்டது.

இதன் காரணமாக இன்று செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் வைத்து ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. துணை தாசில்தார் சங்கரநாரயணன், சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி, தேவி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இசக்கி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தார். அந்த கூட்டத்தில் செய்துங்கநல்லூர் கிராம நிர்வாக இயக்குனர் சந்தனகுமார், முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, செய்துங்கநல்லூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் அய்யாக்குட்டி, பொருளாளர் பால்சாமி, பஞ்சாயத்து உறுப்பினர் பட்டுதுரை, சுவீட் கணேசன், டேவிட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் வருகிற திங்கள் கிழமை முதல் தொடர்ந்து 1 வாரத்துக்கு முழு கடை அடைப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி நாளை ஞாயிற்றுக் கிழமை மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிகொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து திங்கள் கிழமையில் இருந்து முழு கடையடைப்பு நடத்த ஒத்துழைப்புதர வேண்டும் என்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. செய்துங்கநல்லூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா வந்தது. அதை தொடர்ந்து டெய்லர், பலசரக்குகடை, மீன் வியாபாரி மற்றும் ஏஜென்ஸி உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினை சேர்ந்தவர்களுக்கு நோய் பரவியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.