கோரிக்கை மனு

தூத்துக்குடி அண்ணா நகரில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் வேண்டி முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் கமிஷனரிடம் கோரிக்கை மனு

தூத்துக்குடி அண்ணா நகரில் மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட வேண்டும் என்று அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ. ஆறுமுகநயினார் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர் ஆறுமுகநயினார், தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் ஜெயசீலனிடம் அவர்களிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாநகராட்சியிலுள்ள 60வார்டுகளில் 12வது வார்டு மிக முக்கியமான பகுதியாகும். இந்த வார்டில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

ஒன்று முதல் 12வரையுள்ள அண்ணா நகரிலுள்ள அனைத்து தெருக்களிலும் சாலை வசதி சரிவர இல்லை. குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு வழியற்ற வகையில் காட்சி அளிக்கும் இந்த சாலைகளால் தினம் தினம் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த அண்ணா நகரில் சேதமாகி கிடக்கும் சாலைகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் புதிய தார் சாலைகளாக மாற்றி அமைத்திடவேண்டும்.

அண்ணா நகர் முதல், 2வது தெருவிலுள்ள பத்திரகாளியம்மன் கோவில்கள், 3வது தெரு பெருமாள் கோவில், 4வது தெரு சந்தனமாரியம்மன் கோவில், 5வது தெரு பிள்ளையார் கோவில், 6வது தெரு பள்ளி வாசல், 7வது தெரு மாரியம்மன் கோவில், கிறிஸ்தவ ஆலயம், ஒத்தப்பனை முனியசாமி கோவில், 9வது தெரு காளியம்மன் கோவில், பத்திரகாளியம்மன் கோவில், 10வது தெரு ஓடை அருகிலுள்ள பத்திரகாளியம்மன் கோவில், 12வது தெரு பழனிமுருகன் கோவில் என அண்ணா நகரிலுள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்கள் முன்பும் அதிக வெளிச்சம் தரும் வகையிலான உயரமான மின்கோபுரத்துடன் கூடிய ஹைமாக்ஸ் விளக்குகளை அமைக்கவேண்டும்.

இதற்கான நிதியினை அறிஞர் அண்ணா அறக்கட்டளை சார்பிலான சொந்த நிதியில் அமைப்பதற்கும் உரிய அனுமதி தந்திடவேண்டும். குறுகலாக தெருக்களிலும் ஹைமாக்ஸ் லைட்டுகளை பொருத்திட உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது .