தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு பேருந்துகள் : தமிழக அரசுக்கு எம்பவர் அமைப்பு கோரிக்கை

தூய்மை பணியாளர்களுக்கு தனியாக சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை தமிழக அரசுக்கு தூத்துக்குடி எம்பவர் அமைப்பு  வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து எம்பவர் அமைப்பு செயல் இயக்குனர் சங்கர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனைகளில் மக்கள் செலுத்தும் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் எனும் அறிவிப்பை தமிழக மக்களின் சார்பில் மனமார வரவேற்கிறோம்.மேலும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மருத்துவர்களோ, மருத்துவ உதவியாளர்களோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு  உயிரிழக்க நேர்ந்தால், மருத்துவ பணியாளர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக அரசின் காவல்துறை அணிவகுப்பு மரியாதையோடு இறுதி சடங்குகள் நடத்த உத்தரவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம். மின்சார வாரியம் கடந்த முறை செலுத்திய அதே மின்கட்டணத்தை  இந்த முறையும் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளனர். ஆனால் 15 நாட்களுக்கும் மேலாக சிறு குறு தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டிருப்பதால் பணப்புழக்கம் இல்லாத வணிகர்களுக்கு இது சிரமத்தை தரும்.

எனவே வணிகரீதியான மின் இணைப்புகளுக்கு கட்டணத்தொகை மற்றும் கால அவகாசத்தில் உரிய சலுகை வழங்கும்படி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.தூய்மை பணியாளர்களை ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு குப்பை அள்ளும் வண்டியில் தான் கும்பலாக அழைத்துச் செல்கின்றார்கள். இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும். பிற அத்தியாவாசிய பணியாளர்களுக்கு பேருந்துகள் பயன்படுத்துவதைப் போல அனைத்து பேரூராட்சி நகராட்சிகளிலும் மாவட்ட தலைநகரங்களிலும் தூய்மை பணியாளர்களுக்கும் சிறப்பு பேருந்துகளை உடனடியாக இயக்க வேண்டும்.

மத்திய அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் ஐம்பது லட்சம் என அறிவித்துள்ளனர். தொற்றுக்கு உள்ளாகும் சூழலில் தூய்மை பணியாளர்கள் தான் முதல் நிலையில் உள்ளனர்.  ஆகவே அந்த காப்பீடு திட்டத்தை நிரந்தரமாக்கப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மட்டுமின்றி தற்காலிகமான ஒப்பந்த முறையில் பணிபுரிகின்ற தூய்மை பணியாளர் களுக்கும் காப்பீடு வசதியை உடனடியாக அறிவிக்க வேண்டும்.ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளதால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசு அறிவித்த ரூ. 500 க்கான அத்தியாவசிய மளிகை பொருட்களை விலையில்லாமல் வழங்க உத்திரவிட வேண்டும்.
அனைத்து ஊர்களிலும் காய்கறி கடைகளை அந்தந்த பகுதிகளிலுள்ள பெரிய மைதானங்களில் தற்காலிகமாக அமைக்க உத்திரவிடுமாறு வேண்டுகிறோம்.  இதன் மூலம் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.