ஓரளவு மீன்கள் கிடைத்துள்ளதால் மீனவர்களுக்கு திருப்தி: தூத்துக்குடி

45 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற தூத்துக்குடி மீனவர்களின் வலையில் பாறை, விளைமீன், ஊழி, சீலா உள்ளிட்ட மீன்கள் சிக்கியது போதுமான அளவில் மீன்கள் கிடைக்கவில்லை என்றாலும் ஓரளவு மீன்கள் கிடைத்துள்ளது மீனவர்களிடம் திருப்தியை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும், திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி நகரம் வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு கரோனா காரணமாக மத்திய அரசு மீன்பிடி தடைக்காலத்தை முன்பு இருந்தது போன்று 45 நாட்களாக குறைத்து உள்ளது.

இதையடுத்து இந்த தடைகாலம் நேற்று (31-5-20) நள்ளிரவுடன் நிறைவடைந்ததையடுத்து இன்று அதிகாலை மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மொத்தம் உள்ள 241 விசைப்படகுகளில் 120 படகுகள் வீதம் கடலுக்கு செல்லவும், பிடித்து வரும் மீன்களை சமூக இடைவெளியுடன் விற்பனை செய்ய வேண்டும் என்றும் மீன்வளத்துறை அறிவுருத்தியுள்ளது. இந்த அறிவிப்பின் படி இன்று அதிகாலை 120 விசைப்படகுகள் கடலுக்கு சென்றது.
அதிகாலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 120 விசைப்படகுகள் கடலுக்கு சென்று இன்று இரவு கரை திரும்பியது. முதல் நாள் கடலுக்கு சென்ற மீனவர்கள் வலையில் பாரை, விளைமீன், சீலா, ஊழி உள்ளிட்ட வகை மீன்கள் சிக்கியது. கோழி தீவனம் மற்றும் மீன் எண்ணைய் தாயரிக்க பயன்படுத்தப்படும் கலசல் மீன்கள் அதிக அளவில் கிடைத்துள்ளது. போதுமான அளவில் மீன்கள் கிடைக்கவில்லை என்றாலும் ஓரளவு மீன்கள் கிடைத்துள்ளது மீனவர்களிடம் திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் நல்லமுறையில் மீன்கள் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் கடலுக்கு செல்வோம் என்கின்றனர் மீனவர்கள்.

Source: பி.முரளிகணே~; (மாவட்ட செய்தியாளர்)