மீன்பிடி தடையை விலக்க கோரி திரேஸ்புரம் மீனவர்கள் போராட்டம்

தூத்துக்குடியில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள மீன்பிடி தடையை விலக்க கோரி திரேஸ்புரம் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவி வருவதால் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை விலக்கி நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் ராபர்ட் தலைமையில், நூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பீச் ரோட்டில் உள்ள மீன்வளத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அவர்களிடம் மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா, தாசில்தார் செல்வகுமார், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் மீனவர்கள் சிலர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தூத்துக்குடியில் இன்று 120 விசைப்படகுகளில் இன்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதனால் தங்களையும் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.