விசாரணைக்கு அழைத்துச் சென்ற தந்தை-மகன் உயிரிழப்பு: சாத்தான்குளம்

சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைத் திறந்ததாக கூறி விசாரணைக்கு அழைத்துச் சென்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த தந்தை-மகன் உயிரிழப்பு. சாத்தான்குளத்தில் ஒரு மணி நேரமாக சாலை மறியல். பெரும் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வருபவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். கடந்த 19ம் தேதி இரவு 8 மணி அளவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையை திறந்து இருப்பதாக கூறி சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு காவல்துறையினர் தந்தை மகன் இருவரையும் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து மறுநாள் காலையில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். நேற்று இரவு மகன் பென்னிக்ஸ் சிறையில் நெஞ்சுவலி ஏற்பட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்று உயிரிழந்தார். அதை தொடர்ந்து இன்று காலை தந்தை ஜெயராஜும் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக இன்று சாத்தான்குளம் பேய்க்குளம் பகுதியில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.சிறையில் தந்தை மகன் உயிரிழந்ததற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு திருச்செந்தூர் நாகர்கோவில் சாலையில் ஒரு மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸ் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளது.