சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரத்தில் கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி காவல் துறையினரைக் கண்டித்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோா், கடந்த 19-ஆம் தேதி ஊரடங்கை மீறி கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி, போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா். கைது நடவடிக்கையின் போது தந்தை – மகனை சாத்தான்குளம் போலீசார் கடுமையாக தாக்கியதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் பென்னிக்ஸ் திங்கள்கிழமை இரவும், அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறையினரைக் கண்டித்து தூத்துக்குடி நீதிமன்றம் நுழைவு வாயில் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், தந்தை – மகனை கொலை செய்த போலீசாரை டிஸ்மிஸ் செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும், சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் முழக்கமிட்டனர். இதில், வழக்கறிஞர்கள் அதிசயகுமார், கிஷிங்கர், சுரேஷ்குமார், மோகன்தாஸ் சாமுவேல், செல்வம் கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்த்தை முன்னிட்டு தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், சப் இன்ஸ்பெக்டர் ராஜாமணி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.