காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உட்பட அனைவரும் பணியிட மாற்றம் – ஆட்சியர் பேட்டி
சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதாக தந்தை ,மகன் உயிரிழந்த சம்பவத்தில் 2 சப் இன்ஸ்பெக்டர்கள் , 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் (31). இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். கடந்த 19ம் தேதி இரவு 7.30 மணியளவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று உள்ளனர். காவல் நிலையத்தில் பென்னிக்ஸ் முன் நிலையில் அவரது தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் மரணமடைந்தனர், இச்சம்பவம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வியாபாரிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்,
இந்நிலையில் சம்பவ இடத்திற்க்கு விரைந்த, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன் , ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்,
அப்போது ஆட்சியர் கூறுகையில்:-
“நீதிமன்ற காவலில் நடக்கும் மரணங்கள் நீதிபதி தலைமையில்தான் விசாரனை நடைபெறும், ஆகவே போலீசார் இதில் தலையிட வாய்ப்பில்லை, தலைமை மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெறும், பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யக்கோரி வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு , அனைத்தும் வீடியோ பதிவுசெய்யப்படும், இறந்த குடும்பத்தினர் சார்பில் ஒரு மருத்துவர் நியமிக்கப்பட்டு அவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யும் கோரிக்கையும் ஏற்கப்பட்டு மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே தவறு நடக்க வாய்ப்பில்லை.
இறந்தவர் குடும்பத்திற்க்கு நிதியுதவி மற்றும் அரசு வேலை வழங்கவும் வைக்கப்பட்ட கோரிக்கை திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் மூலம் முதலமைச்சரின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்ப்பட்டு அந்த குடும்பத்திற்க்கு தேவையான உதவிகள் செய்யப்படும், முதற்கட்டமாக விரைவாக பிரேத பரிசோதனை செய்து அறிக்கை பெறப்படும், குற்றத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் இருவர் உட்பட காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்,
காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டு , புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், மேலும் யார் இதில் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீதும் வழக்கு பதிந்து தவறு செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தினரிடம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி உறுதி தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
