தூத்துக்குடி மாவட்டத்தை சுற்றியுள்ள விவசாய கிராமங்களில் வலுக்கும் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில்லுள்ள தாமிரபரணி ஆற்றுபாசனத்தை ஆதாரமாக கொண்டு அங்குள்ள விவசாயிகள் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர், இந்நிலையில் அந்த மாவட்டத்திலுள்ள குலையன்கரிசல் பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டு வருகிறது, இதனால் அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் அழிவதோடு மட்டுமில்லாமல் , அருகில்லுள்ள அங்கன்வாடி மையம், கல்லூரி வளாகம் ஆகியவற்றை சுற்றி குழாய்களில் கசிவு ஏற்பட்டால் பெரும் விபத்து ஏற்படும் என்ற காரணங்களால் அந்த சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குழாய் அமைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம் குலையன்கரிசல் பகுதியில் விவசாயிகள் யாரும் இல்லாத நேரத்தில் வயல்களில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிகளில் ஐஓசிஎல் திட்ட மேலாளர் குருமூர்த்தி தலைமையில் பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர் , குழாய்களை பதிப்பதற்க்காக பொக்லைன் இயந்திரம் கொண்டு நெற்பயிர்கள் வளர்ந்துள்ள விளைநிலங்களை சேதபடுத்தினர். இதனை அறிந்த அவ்வூர்மக்கள் திரண்டு வந்தனர் இதனால் அச்சமடைந்த அதிகாரிகள் இயந்திரங்கள் விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்,

சேதமடைந்த பயிர்களை கையில் ஏந்தி, கலங்கிய கண்களோடு விவசாயிகள் அதே இடத்தில் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனை அறிந்து அப்பகுதிக்கு வந்த பயிற்சி ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான், ரூரல் டீஎஸ்பி கலைக்கதிரவன், புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி, மற்றும் போலிஸார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

விவசாயிகள் புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்,
இதனையடுத்து தாமிரபரணி ஆற்றுபாசனம் மூலம் பயன்பெறும் தூத்துக்குடியை சுற்றியுள்ள விவசாயிகள் வரும் 22ம் தேதி போராட்டம் நடத்தவுள்ளனர் இதனால் அப்பகுதியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.