அதிக விளைச்சல் இருந்தும் விற்பனை இல்லை என்று விவசாயிகள் பெரும் வேதனை

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பில் வாழை பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது வாழைத்தார் விளைச்சல் நன்றாக இருந்தபோதிலும் விலை இல்லை. இதனால் வாழைத்தார்கள் வெட்டாமல் விடப்பட்டுள்ளதால் மரத்திலேயே பழுத்து காணப்படுகின்றன. அந்த வாழைப்பழங்களை காக்கை குருவிகள் கொத்தித் தின்று விட்டு செல்வதால் வாழைத்தார் முழுவதும் பிசின் வடிந்து வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த தார்கள் ஏலம் விடுவதற்கு ஏற்றது அல்ல என்பதால் அதனை மரத்திலேயே வெட்டாமல் விட்டுவிடுகின்றனர். குலையன்கரிசல் பகுதியிலும் மரங்களில் வாழைத்தார்கள் வெட்டாமல் விடப்பட்டுள்ளன. மேலும் வெட்டப்பட்ட வாழைத்தார்களும் அங்குள்ள ஏலக் கூடத்தில் விலை போகாமல் தேங்கிக் கிடக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சராசரியாக நாளொன்றுக்கு 60 முதல் 70 லாரிகளில் வெளி மாவட்டங்களுக்கு வாழைத்தார்கள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. ஊரடங்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்லும் லாரிகளுக்கு அதிக வாடகை கொடுக்க வேண்டியிருப்பதால் வாழைத் தார்கள் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாலும் வாழைக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் கூறினார். மேலும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.