எழுத்தாளர் இளசை மணியன் உடல்நிலை குறைவால் மறைவு

எட்டயபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இளசை மணியன். தீவிரமான பாரதியின் பக்தர். எட்டயபுரம் பாரதி நினைவாலயத்தில் காப்பாளராக இருந்தவர். உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்

இவருடைய இயற்பெயர் ராமசுப்பிரமணியன்,புனைப்பெயர் : இளசை மணியன் , 1942 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி பிறந்தார், தற்போது அவருக்கு வயது 74. இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், முத்துக்குமார் பாரதி என்ற மகனும் உள்ளனர்.

பாரதி ஆய்வு ,இலக்கிய திறனாய்வு, வரலாற்று ஆய்வு ,கதை கவிதை மொழிபெயர்ப்பு, செய்திவிமர்சனம் பாரதி விழா, இலக்கிய விழாக்கள் நடத்துவது, வீதி நாடகங்கள் நடத்துவது . பாரதி தரிசனம் என இரண்டு பாகங்கள் வெளியீடு. பாரதியும் மதநல்லிணக்கம், பாரதியும் சோசலிசமும், பாரதியும் ரஷ்யப் புரட்சியும், ஊணர் செய்த சதி (பாரதி வாழ்வில் நிகழ்ந்த சம்பவம்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியீடு. தமிழகம் முழுவதும் பல்வேறு இலக்கிய மன்றங்களில் பாரதி மற்றும் இலக்கியம் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்

இவருக்கு கடந்த ஆண்டு 2019 டிசம்பர் 11ம் தேதி பாரதி பிறந்தநாளன்று எட்டையபுரத்தில் தினமணி சார்பில் நடைபெற்ற பாரதி விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பாரதி ஆய்வாளர் இளசை மணியனுக்கு தினமணியின் மகாகவி பாரதி விருது வழங்கி கவுரவித்தார்.

இளசை மணியன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சி.மகேந்திரன், கவிஞர் பரமேஸ்வரி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சி.மகேந்திரன் முகநூலில் பதிவிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தோழர் இளசை மணியன் இறந்துவிட்டார். ஒரு தீவிரமான பாரதியின் பக்தர். எட்டயபுரம் பாரதி நினைவாலயத்தில் காப்பாளராக இருந்தவர். புகழ்மிக்க மாக்சிய தமிழறிஞர் தொ.மு.சி ரகுநாதன் தன்னுடைய நூல்கள் அனைத்தையும், ஒரு அறக்கட்டளையாக்கி பாதுகாக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். வாழ்நாள் முழுவதும் இலக்கிய சேவை புரிந்தவர். கல்கத்தா, ஆவணக் காப்பகத்துக்கு சென்று பாரதியின், இந்தியா இதழில் உள்ள அரிய தகவல்களைத் தொகுத்து, பாரதி தரிசனம் என்ற நூலை கொண்டு வந்தவர். இந்த நூலின் வருகைக்குப் பிறகுதான் தமிழ் சமூகத்தில் பாரதியைப் பற்றிய இன்னொரு முகம், ஆய்வுக் களத்துக்குள் அடியெடுத்து வைத்தது. வாழ்நாள் முழுவதும் இலக்கிய போராளியாகவும், ஒரு பொதுவுடமைகாரனாகவும், முழுமையான வாழ்வை நிறைவு செய்த தோழர் இளசை மணியன் அவர்களுக்கு எனது வீரவணக்கம்” என்று தெரிவித்துள்ளார்.