விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

வரும் 27-ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ள நிலையில் ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவது உள்ளிட்டவை தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என்றும் அந்த வாகனங்களில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு தேவையானவற்றை செய்யவும், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், ஒரு அறையில் எட்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முக கவசம் அணிந்து உள்ளார்களா என்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.