கொரோனா தொற்றால் பாதிப்பு அதிகமாகி வருவதால் தடுக்க கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்: கண்காணிப்பு அதிகாரி குமார் ஜெயந்த்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிப்பு அதிகமாகி வருவதால் தடுக்க கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என கண்காணிப்பு அதிகாரி குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்

பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஐஏஎஸ் அலுவலர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள குமார் ஜெயந்த் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த சுனாமி குடியிருப்பு மற்றும் தூத்துக்குடி டூவிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளபட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் அதிகம் வந்து செல்லும் தற்காலிக காய்கறி மார்க்கெட் மமற்றும் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாவட்டத்தில் 24,584 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 789 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 185 பேர் வெளி மாநிலத்தை சார்ந்தவர்கள், மொத்தத்தில் 519 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். தற்போது 234 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த மூன்று மாதங்களாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் இந்த மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை என்று இருந்த நிலையில் மீண்டும் தொற்று பரவி வருவதால் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பரவல் நிலைக்கு செல்லவில்லை என்றார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.