தூத்துக்குடி மாவட்டத்தில்கொரானா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது : அமைச்சர் பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடம்பூர், கயத்தார், கழுகுமலை ஆகிய பகுதிகளில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள், பூ வியாபாரம் செய்யும்; தொழிலாளர்கள், பந்தல் தொழிலாளர்கள், சவுன்டு சர்விஸ் தொழிலாளர்கள், கூடை பின்னும் தொழிலாளர்கள், மண் பாண்டம் செய்யும் தொழிலாளர்கள், இருசக்கர வாகன மெக்கானிக் என மொத்தம் 1,652 தொழிலாளர்களுக்கு 10 கிலோ அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (09.05.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, சுமை தூக்கும் தொழிலாளர்கள், பூ வியாபாரம் செய்யும்; தொழிலாளர்கள், பந்தல் தொழிலாளர்கள், சவுன்டு சர்விஸ் தொழிலாளர்கள், கூடை பின்னும் தொழிலாளர்கள், மண் பாண்டம் செய்யும் தொழிலாளர்கள், இருசக்கர வாகன மெக்கானிக் என மொத்தம் 1652 தொழிலாளர்களுக்கு 10 கிலோ அரிசி, பருப்பு, மளிகை பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உலக சுகாதார அமைப்பு மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா தொற்று நோய் சமூக பரவல் ஏற்படாத வகையில் மே 17 வரை சுய ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சுய ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.  இந்த கால கட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்திடவும் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டுமானம், ஓட்டுநர்கள் மற்றும் பல்வேறு தொழிலாளர்கள் என மொத்தம் 96,999 தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணத்தொகை தலா ரூ.1000/- வழங்கப்பட்டுள்ளது. மேலும்; 40,000 மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலம் நிவாரண தொகை ரூ.5,000/-மும், மீன்பிடி குறைந்த காலத்திற்கு ரூ.5,000/-மும் வழங்கபட்டுள்ளது. மேலும் 46,112 மீனவர்களுக்கு மீனவ நல வாரியத்தின் மூலம் தலா ரூ.1,000/-மும் வழங்கபட்டுள்ளது. சமூக நலத்துறை மூலம் 185 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கரோனா நிவாரணத்தொகை தலா ரூ.1000/- வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் 16,905 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு உள்ளாட்சித்துறையின் மூலம் அரிசி, பருப்பு, மளிகை பொருட்களும், வருவாய் துறை மூலம் 6,382 நபர்களுக்க அரிசி, பருப்பு, மளிகை பொருட்களும், வழங்கபட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி, 2 நகராட்சி, 19 பேருராட்சிகள் மற்றும் 12 ஊராட்சி ஒன்றிய அளவில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் 5,000 நபர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தொண்டு நிறுவனத்தின் மூலம் 20,693 நபர்களுக்கு உணவுகள் வழங்கபட்டுள்ளது. 43 தொண்டு நிறுவனத்தின் மூலம் 12,786 நபர்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் வழங்கபட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 30 அம்மா உணவகம் மற்றும் சமுதாய கூடத்தின் மூலம் 4,55,917 நபர்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்கபட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 5,338 நபர்கள் கரோனா தொற்று நோய் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே 27 நபர்களுக்கு கரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் 26 நபர்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார்கள். ஒரு நபர் சிகிச்சை பலனின்றி உயிர்யிழந்துள்ளார். கடந்த 15 நாட்களாக கரோனா தொற்று இல்லாத நிலை இருந்தது. கடந்த 2 நாட்களாக 3 நபர்களுக்கு கரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வெலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு நபரும், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2 நபர்களும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னை அல்லது வெளிமாநிலத்திலிருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களை கண்டறிந்து பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பிரதான சாலைகளில் 15 காவல் துறையின் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் குறுக்குசாலைகளில் 45 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளாட்சித்துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளார்கள். 
பொதுமக்கள் சுய ஊரடங்கு உத்தரவினை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். கரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் கரோனா தொற்று நோய் இல்லாத மாவட்டமாக மாறிட பொதுமக்கள் அரசு தெரிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றுவதோடு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சி மூலம் தயார் செய்யப்பட்ட கபசுர குடிநீரினை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் ராஜாராம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சசிகுமார், வசந்தா, வட்டாட்சியர்கள் பாஸ்கரன் (கயத்தார்), மணிகண்டன் (கோவில்பட்டி), கூட்டுறவு பண்டக சாலை தலைவர் கருப்பசாமி, வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் முத்தையா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பழனிசாமி, செயல் அலுவலர்கள் ஜோதிபாசு(கயத்தார்), முருகன் (கழுகுமலை), மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முக்கிய பிரமுகர்கள் அய்யாதுறைபாண்டியன், விஜயபாண்டியன், முத்துராசு, எஸ்.பி.எஸ்.பி.நாகராஜன், வினோபாஜி, மகேஷ்குமார், வாசுமுத்து, மோகன், செல்வம் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.