2900 நபர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது : அமைச்சர் செ.ராஜூ

கோவில்பட்டி பகுதியில் 2900 நபர்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய பைகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆகியவற்றை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் ஏழை, எளிய மக்கள், சுமை தூக்கும் தொழிலாளிகள், லோடு ஆட்டோ, வேன் ஓட்டுநர், கார் ஒட்டுநர்கள், புகைப்பட கலைஞர்கள் பந்தல் தொழிலாளர்கள், கலை குழுவினர்கள் என மொத்தம் 1900 நபர்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய பைகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ வழங்கினார். மேலும் பாண்டவர்மங்கலம் ஊராட்சி காமராஜர் நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பழனிசாமி ஏற்பாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய பைகளையும், ஸ்பிக் நிறுவனத்தின் மூலம் 1000 நபர்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றையும் வழங்கினார்.  மேலும் 40 தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு முகவசங்கள், கையுறை ஆகியவற்றையும் அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி, முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் 4,940 நபர்கள் கரோனா தொற்று நோய் பரிசோதனை செய்ததில் 27 நபர்களுக்கு கரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் 26 நபர்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார்கள். ஒரு நபர் சிகிச்சை பலனின்றி உயிர்யிழந்துள்ளார். கடந்த 17 நாட்களாக கரோனா தொற்று நோய் நமது மாவட்டத்தில் இல்லையென்ற நிலையில் இருந்தது. நேற்றைய தினம் 2 நபர்களுக்கு கரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரு நபர் லாரி டிரைவர் வெளிமாநிலத்திற்கு சென்று வந்தவர். மேலும் ஒரு நபர் வெளி மாவட்டத்திலிருந்து அனுமதி பெறாமல் நமது மாவட்டத்திற்கு வருகை வந்தவராக உள்ளார். சென்னை அல்லது வெளிமாநிலத்திலிருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களை கண்டறிந்து பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பிரதான சாலையில் 15 காவல் துறையின் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் குறுக்குசாலைகளில் 45 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டம் அல்லது வெளி மாநிலத்திலிருந்து வருகை தரும் நபர்களை 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறது. மேலும் அவர்களுக்கு கரோனா தொற்று நோய் பரிசோதனையும் செய்யப்படும்
அரசு கரோனா தொற்று நோய் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்ததாலும் விழிப்புணர்வுடன் இருக்கும் பட்சத்தில் கரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க முடியும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளிவர வேண்டும். அரசு தெரிவிக்கும் விதிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக பின்பற்றுவதோடு முழு ஒத்தழைப்பு அளிக்க வேண்டுமென தெரிவித்தார்.

முன்னதாக கோவில்பட்டி புள்ளியன் சங்கத்தின் சார்பில் ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும், கோவில்பட்டி குருசாமி நாடார் ரூ சன்ஸ் சார்பில் ரூ.25 ஆயிரம் காசோலையினையும் முதலமைச்சர் கரோனா தடுப்பு பணிகளுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  கடம்பூர் செ.ராஜூ அவர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணைத்தலைவர் பழனிசாமி, நகராட்சி ஆணையாளர் ராஜாராம், வட்டாட்சியர் மணிகண்டன், வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் ராமகிருஷ்ணன், மக்கள் தொடர்பு அலுவலர் அமிர்த கௌரி, முதுநிலை மேலாளர் (நிர்வாகம்) ஜெயபிரகாஷ், லைன்ஸ் கிளப் கோவில்பட்டி தலைவர் டாக்டர்.பிரான்ஸிஸ் ரவி, செயலாளர் ராமசாமி, பொருளாளர் சீனிவாசன், முக்கிய பிரமுகர்கள் அய்யா துரைபாண்டியன், விஜயபாண்டியன், சுப்புராஜ், மகேஷ்குமார், வண்டலாம் கருப்பசாமி, மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.