நாகர்கோவில் மணி மேடை அருகில் அசுத்தமாக உள்ள தண்ணீர் குழாய் தொடர்பாக நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளருக்கு எம்பவர் இந்தியா அமைப்பின் செயல் இயக்குனர் ஆ. சங்கர் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் எம்பவர் இந்தியா அமைப்பின் செயல் இயக்குனர் ஆ. சங்கர் அவர்கள் கூறியதாவது “எம்பவர் இந்தியா அமைப்பானது 1991 இல் தமிழ்நாடு சங்க விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு ஆண்டுதோறும் முறையாக புதுப்பிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக அடித்தட்டு மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பணி செய்து வரும் சமூக சேவை அமைப்பாகும். ஐக்கிய நாடுகளின் பொருளாதார சமூக கவுன்சிலுடன் (UNECOSOC) சிறப்பு ஆலோசனை அந்தஸ்தைக் கொண்ட அமைப்பாகும். ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP & UNCCD) ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாகும். மேலும் தமிழக அரசின் சிறந்த நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு விருதையும் பெற்றுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சமூக ஒருங்கிணைப்பு, நுகர்வோர் மற்றும் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு போன்ற பல்வேறு தளங்களில் பணி செய்து வருகின்றது.
நாகர்கோவில் மணிமேடை அருகிலுள்ள தபால் நிலையத்திற்கும், ஹோட்டல் பிரபுவிற்கும் நடுவில் நாகர்கோவில் மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாயிலிருந்து வெளிவரும் தண்ணீரால் அப்பகுதியே மிகவும் அசுத்தமாக காணப்படுகிறது. இந்த அசுத்தமான தண்ணீர் நடைபாதையின் மீது வழிந்து செல்கிறது. இதனால் இந்த அசுத்தமான தண்ணீர் மீது நடந்து தான் பொதுமக்கள் அப்பகுதியை கடக்க வேண்டிய அவலமான சூழ்நிலை உள்ளது. ஆகவே இந்த இடத்தில் உள்ள தண்ணீர் வெளியே வராதவாறு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதோடு அப்பகுதியை சுத்தமாக பராமரிப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.