டிசம்பர் 31-ம் தேதி வரை பிபிஓ, ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்: விதிமுறைகளை நீட்டித்தது மத்திய அரசு

வெளிப்பணி ஒப்படைப்பு நிறுவன ஊழியர்கள் (கால்சென்டர்), பிபிஓ, தகவல் தொழில்நுட்பத் துறை (ஐடி) ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான விதிமுறைகளை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸின் தாக்கம் குறையாததையடுத்து, ஜூலை 31-ம் தேதி வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று வகுத்திருந்த விதிமுறைகளை மேலும் 5 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது மத்திய தொலைத்தொடர்புத் துறை.

கரோனா வைரஸ் பாதிப்பு நாட்டில் மார்ச் மாதம் ஏற்படத் தொடங்கியபோது, ஐ.டி. நிறுவனங்கள், பிபிஓ நிறுவனங்கள், கால்சென்டர் போன்றவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் ஏப்ரல் 30-ம் தேதி வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை விதிமுறைகளை வகுத்து வெளியிட்டது.

ஆனால், கரோனா வைரஸ் பரவல் ஏப்ரல் மாதத்துக்குப் பின் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அந்த விதிமுறைகளை தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் ஜூலை 31-ம் தேதிவரை நீட்டித்தது. அதாவது ஜூலை 31-ம் தேதிவரை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி வழங்கியது.

இந்நிலையில் நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 92 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 648 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 742 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் நேற்று இரவு ட்விட்டரில் பதிவிட்ட அறிவிப்பில், “கரோனா வைரஸ் பரவல் சூழலைக் கருத்தில்கொண்டு, ஐ.டி. நிறுவனங்கள், பிபிஓ நிறுவனங்கள், சேவைத்துறையில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வகுத்த விதிமுறைகள், வழிகாட்டல்கள் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐ.டி., பிபிஓ நிறுவனங்களில் 85 சதவீதப் பணியாளர்கள் வீட்டிலிருந்துதான் பணியாற்றி வருகின்றனர். மிகக்குறைவாக மட்டுமே அலுவலகத்துக்கு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Hindu tamil