பதிவு செய்யாத வாடகை வீட்டில் வசிக்கும் தொழிலாளர்களுக்கும் கரோனா நிவாரண நிதி ரூ 2 ஆயிரம் வழங்கிட வேண்டும் என ஸ்ரீவிஸ்வகர்மா பொது தொழிலாளர்கள் சங்கத் தலைவர் மூக்காண்டி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு அமைப்பு சாராத கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ 2 ஆயிரமும், பிற உதவிகளும் வழங்கி வருவது பாராட்டுக்குரியது. இந்த வாய்ப்புகளை சொந்த வீட்டில் வசதியாக உள்ள தொழிலாளர்கள் அதிகளவிலும், வாடகை வீட்டில் வசித்து வரும் வசதி குறைந்த தொழிலாளர்கள் குறைந்த அளவில் பயனடைந்துள்ளனர். பெரும்பாலான தொழிலாளர்கள் பயனடையாமல் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனர். இதற்கு காரணம் வசதி குறைந்த பெரும்பாலான தொழிலாளர்கள் தூத்துக்குடி மாவட்ட நலவாரிய அலுவலகத்தில் தங்களை உறுப்பினாராக பதிவு செய்யவில்லை என்பதேயாகும்.
சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் நகைத்தொழிலாளர்கள்,கட்டுமான தொழிலாளர்கள், பனைத்தொழிலாளர்கள், தீப்பெட்டி மற்றும் முந்திரிபருப்பு தொழிலாளர்கள், ஓட்டல் சமையல் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், தையல் தொழிலாளர்கள், மின் பழுது நீக்கும் தொழிலாளர்கள், பூஜாரிகள், பூகட்டும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் சுமார் 2000 பேர்கள் வாடகை வீட்டில் இருந்து கரோனா தடுப்பால் வாடகை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். வீட்டு உரிமையாளர்கள் வாடகை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் இவர்கள் வேலை வாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு வழங்கும் அத்தியாவசிய உணவு பொருள்கள் போதவில்லை. இதனால் அவசர தேவைக்கு வட்டிக்கு பணம் வாங்கும் நிலையில் உள்ளனர்.
இத்தொழிலாளர்கள் பெரும்பாலானோர் நலவாரியத்தில் அடையாள அட்டை பெறாததால் நிவாரண தொகை பெற முடியாமல் உள்ளனர். நலவாரிய அலுவலகம் சாத்தான்குளம் பகுதியில் செயல்படாமல் தூத்துக்குடியில் உள்ளதால் 20 சதவீதம் பேர்கள் தான் அடையாள அட்டை பெற்றுள்ளனர். ஆதலால் அரசு வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி மூலம் வாடகை வீட்டில் வரும் தொழிலாளர்களை கண்டறிந்து நலவாரியத்தில் பதிவு செய்யப்படாத அனைத்து தொழிலாளர்களுக்கும் நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை மற்றும் பிற உதவிகளை வழங்கிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.