மதுரை – திருநெல்வேலி மண்டலங்களுக்கிடையே பொதுப் போக்குவரத்து தொடங்க வலியுறுத்தல்

மதுரை – திருநெல்வேலி மண்டலங்களுக்கிடையே பொதுப் போக்குவரத்து இல்லாததால் அண்டை மாவட்டங்களுக்கு இடையேயான பகுதி பொதுமக்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதை தடுக்க இரு மண்டலங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்தை தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் அத்தியவாசியப் பணிகளான மருத்துவம், இறப்பு, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று கார்களில் வெளியூர்களுக்குச் சென்று வந்தனர்.இந்நிலையில் தமிழக அரசு பொதுப் போக்குவரத்தை அண்மையில் செயல்பட அனுமதித்தது. இதில் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை தடை செய்தது. இதையடுத்து, திருநெல்வேலி மண்டலத்திற்கு உள்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி பகுதிகளில் பொதுப் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது.ஆனால் தூத்துக்குடி மாவட்ட எல்கையான சாத்தூர் செல்வதற்கும், அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி வருவதற்கும் பொதுப் போக்குவரத்து வசதி இல்லை. மேலும், குறிப்பாக கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதி வணிகர்கள் கொள்முதல் செய்வதற்கு மதுரை செல்வதும் உண்டு.மண்டலங்களுக்கு இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் கொள்முதல் செய்வதற்கும், மருத்துவப் பரிசோதனைக்கும் மதுரைக்குச் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கோவில்பட்டியையடுத்த சாத்தூர், சிவகாசி, விருதுநகர் பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் நுழைய வேண்டுமென்றால் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு வரை ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வந்து அங்கிருந்து நடந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, தமிழக அரசு மண்டலங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்தை உடனடியாக தொடங்க வேண்டும். குறிப்பாக, மாவட்ட எல்கைக்கு உள்பட்டோர் அத்தியவாசியப் பணிக்கு உள்ளே வர அனுமதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தூத்துக்குடி, நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களை மதுரை மண்டலத்துடன் இணைத்து பொதுப் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.