தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் ரம்மி தடை செய்ய எம்பவர் இந்தியா கோரிக்கை

இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பு செயல் இயக்குநர்; ஆ.சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்து தரப்பு மக்களும் கொரோனா நோய்த் தொற்றினால் ஏற்பட்டுள்ள முழு ஊரடங்கினால் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வரும் இந்த சூழ்நிலையில் ஆன்லைன் ரம்மி சூதாட்டம், பப்ஜி ஆகிய விளையாட்டுகள் இளைஞர்களை அடிமையாக்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த தளங்கள் உடனடியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால் அவை மிகப் பெரிய சமூக பேரழிவை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளதாக எம்பவர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் ஒரு பள்ளி மாணவர் தனது பெற்றோரின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 16 இலட்சம் ரூபாயை இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு இழந்துள்ளார் என்பது மிகவும் அதிர்ச்சித் தர தக்க செய்தியாகும். இந்த தளங்கள் குறித்து பிரபல தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதை உடனடியாக பிரச்சார் பாரதி அமைப்பு தடை செய்ய வேண்டும். மேலும் பொதுமக்களை தூண்டும் வகையில் ஆன்லைன் ரம்மி குறித்து குறுஞ்செய்திகள் வெளியிடப்படுவதை மத்திய தொலைதொடர்புத் துறை கண்காணித்து இதை வெளியிடுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எம்பவர் சங்கர் தெரிவித்துள்ளார்.