பட்டதாரிகளுக்கு ஒரு நல்வாய்ப்பு… மின் உற்பத்தி பகிர்மானக் கழகத்தில் 2,400 வேலைகள்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (Tamil Nadu Generation and Distribution Corporation Ltd) உதவிப் பொறியாளர் (Assistant Engineer), இளநிலை உதவியாளர் – கணக்கு (Junior Assistant – Accounts) மற்றும் கணக்கீட்டாளர் (Assessor) பணிகளுக்கான 2,400 பணியிடங்களை நிரப்புவதற்கான மூன்று அறிவிப்புகள் தனித்தனியாக வெளியாகியிருக்கின்றன.

காலியிடங்கள்:

உதவிப் பொறியாளர் பணியிடங்களில் மின்னியல் (Electrical) – 400, இயந்திரவியல் (Mechanical) – 125, கட்டடவியல் (Civil) – 75 என்று 600 பணியிடங்களும், இளநிலை உதவியாளர் – கணக்கு (Junior Assistant – Accounts) – 500 பணியிடங்களும், கணக்கீட்டாளர் (Assessor) – 1,300 பணியிடங்களும் என்று மொத்தம் 2,400 பணியிடங்கள் காலியிடங்களாக இருக்கின்றன. ஒவ்வொரு பணியிடத்துக்குமான இட ஒதுக்கீட்டுத் தகவல்களுக்குத் தகவல் குறிப்பேட்டைப் பார்க்கலாம்.

கல்வித் தகுதி:

1. உதவிப்பொறியாளர் பணிகளுக்கு EEE, ECE, மின்னியல் மற்றும் கருவிப்பொறியியல் (EIE), கணினி அறிவியல் (CSE), Mechanical, Cilvil பாடங்களில் ஒன்றில் இளநிலைப் பொறியியல் (B.E/B.Tech) பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மின்னியல் (Electrical), இயந்திரவியல் (Mechanical), கட்டடவியல் (Civil) பிரிவில் AMIE (Section A and B) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பாடப்பிரிவுக்குமான இட ஒதுக்கீட்டுத் தகவல்களுக்குத் தகவல் குறிப்பேட்டைப் பார்க்கலாம்.

2. இளநிலை உதவியாளர் (கணக்கு) பணிக்கு வணிகவியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் (B.Com) பெற்றிருக்க வேண்டும்.

3. கணக்கீட்டாளர் பணிக்கு கலை அல்லது அறிவியல் அல்லது வணிகவியல் பாடமொன்றில் இளநிலைப் பட்டம் (BA/B.Sc/B.Com) பெற்றிருக்க வேண்டும். அளவீட்டுக் கருவி மூலம் கணக்கீடு செய்வதற்கும், மிதிவண்டி ஓட்டுவதற்கும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. அனைத்துப் பணியிடங்களுக்கும் 1.7.2019 அன்று 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

2. உதவிப்பொறியாளர் மற்றும் கணக்கீட்டாளர் பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற, கணவனை இழந்த பெண்கள் ஆகியோருக்கு 5 ஆண்டுகளும், பிற்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர்/சீர் மரபினர் ஆகியோருக்கு 2 ஆண்டுகளும் வயதுத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

3. இளநிலை உதவியாளர் (கணக்கு) பணியிடத்துக்குப் பொதுப்பிரிவினர் தவிர, மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் https://www.tangedco.gov.in எனும் இணையதளத்தில் பதிவுசெய்து, உதவிப்பொறியாளர் பணியிடத்துக்கு 24.1.2020 முதல் 24.2.2020 வரையிலும், இளநிலை உதவியாளர் (கணக்கு) பணியிடத்துக்கு 10.2.2020 முதல் 9.3.2020 வரையிலும், கணக்கீட்டாளர் பணியிடத்துக்கு 10.1.2020 முதல் 10.2.2020 வரையிலும் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

பொது, பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் – முஸ்லிம், மிகவும் பிற்பட்ட வகுப்பினர்/ சீர் மரபினர் (General/BC/BCM/MBC/DNC) ரூபாய் 1,000/- ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினர் (SC/SCA/ST) ரூபாய் 500/- ஆதரவற்ற கணவனை இழந்த பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூபாய் 500 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பக் கட்டணத்தை கனரா வங்கி / இந்தியன் வங்கி / இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் சலான் வழியாகச் செலுத்த வேண்டும். உதவிப்பொறியாளர் பணியிடத்துக்கு 27.2.2020, இளநிலை உதவியாளர் (கணக்கு) பணியிடத்துக்கு 12.3.2020, கணக்கீட்டாளர் பணியிடத்துக்கு 13.2.2020 விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி நாளாக இருக்கின்றன.

இளநிலை உதவியாளர் (கணக்கு) மற்றும் கணக்கீட்டாளர் பணிகளுக்கு பொதுத்தமிழ் /பொது ஆங்கிலம் (General Tamil/ General English) – 20 மதிப்பெண்கள், திறன் மற்றும் மனத்திறன் (Aptitude & Mental Ability Test) – 20 மதிப்பெண்கள், பொதுக்கல்வி (General Studies) – 60 மதிப்பெண்கள் என்று 100 மதிப்பெண்களுக்கான தேர்வாக இருக்கும்.

தேர்வில்பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1:1 எனும் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்பு பணியமர்த்தப்படுவர். உதவிப்பொறியாளர் பணிக்கு நிலை 1 (ரூபாய் 39,800 – 1,26,500), இளநிலை உதவியாளர் (கணக்கு) மற்றும் கணக்கீட்டாளர் பணிகளுக்கு நிலை 3 (ரூபாய் 19,500 – 62,000) எனும் சம்பள ஏற்ற முறையில் (Scale of Pay) சம்பளம் வழங்கப்படும்.

கூடுதல் தகவல்கள்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் https://www.tangedco.gov.in/ எனும் இணையதளத்தைப் பார்வையிடலாம். அல்லது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அலுவலகத்துக்கு நேரிலோ, உதவித் தொலைபேசி 044 – 28522256 எனும் எண்ணில் அலுவலக வேலை நேரத்திலோ தொடர்புகொண்டு பெறலாம். sporecruit@tnebnet.org எனும் மின்னஞ்சலில் தொடர்புகொண்டும் தகவல்களைப் பெறமுடியும்.