இக்லியா (ECLIA) வேதியியல் பொருள் அளவை கண்டறியும் தானியங்கி பரிசோதனை உபகரணம் திறப்பு நிகழ்ச்சி : தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பில் இக்லியா (ECLIA) வேதியல் பொருள் அளவை கண்டறியும் தானியங்கி பரிசோதனை கருவியை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இக்லியா (ECI.IA ) வேதியல் பொருள் அளவை கண்டறியும் தானியங்கி பரிசோதனை கருவியை திறந்து வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (06.06.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு, ரூ.25 லட்சம் மதிப்பில் இக்லியா (Electro chemil luminescience Immunoassay Analyser) வேதியல்பொருள் அளவை கண்டறியும் தானியங்கி பரிசோதனை கருவியை திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

பின்னர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

கோவிட் 19 கொரோனா வைரஸ் சமூக பரவாக மாறாமல் இருக்க உலக நாடுகள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்தது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்திலும் சுய ஊரடங்கு உத்தரவு மார்ச் 22ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோய் சமூக பரவாக மாறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு மாவட்டங்களில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்திட உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 7 முறை மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்கட்டமாக 27 நபர்கள் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டார்கள். இதில் 26 நபர்கள் பூரண குணம் பெற்று வீடு திரும்பி உள்ளார்கள். ஒரு நபர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். பின்னர் 16 நாட்களாக கொரோனா தொற்று நோய் இல்லாத நிலை ஏற்பட்டது. பின்னர் சென்னை மாவட்டம் மற்றும் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வருகை தந்த நபர்களுக்கு கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வெளி மாநிலங்களில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களை கண்டறிவதற்கு எல்லைகளில் காவல் துறையினர் மூலம் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர்களை தனிமைபடுத்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது.

கொரோனா தொற்று இல்லாத நபர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்து 14 நாட்கள் தனிமை படுத்தப்படுவார்கள். கொரோனா தொற்று உறுதி செய்த நபர்களை தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.80 லட்சம் மதிப்பில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது. 05.06.2020 அன்று வரை 13,293 நபர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தந்த 156 நபர்களுக்கு, குஜராத் மாநிலத்தில் இருந்து நமது மாவட்டத்திற்கு வந்த 6 நபர்களுக்கு, உத்திர பிரதேசம் மாநிலத்தில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தந்த 2 நபர்களுக்கு, பீகார், ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து வருகை தந்த நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பில் இக்லியா (ECLIA) வேதியல் பொருள் அளவை கண்டறியும் தானியங்கி பரிசோதனை கருவி தென் மண்டலங்களில் திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்தில் இரண்டாவதாகவும் முதலாவதாக நமது தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்த இக்லியா (ECLIA) கருவி கொண்டு நோயின் தாக்கத்தினை விரைவில் கண்டறியப்படுவதால், உரிய சிகிச்சை அளித்து உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும். மேலும், இந்த கருவியின் மூலம் ஹார்மோன் பரிசோதனைகளும், புற்று நோயளிகளுக்கான பரிசோதனைகளும், HIV நோயாளிகளுக்குரிய சோதனைகளும், மஞ்சள் காமாலை குறித்த பரிசோதனைகளும் துல்லியமாக கண்டறிய முடியும். மேலும் இக்லியா (ECLIA) உபகரணத்தின் மூலம் மிக வேகமாக அதாவது 18 முதல் 27 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகள் கிடைக்கிறது.

இன்று தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு பூரண குணம் பெற்ற 15 நபர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் நமது மாவட்டத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்த 8,700 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டு இருந்தார்கள். இதில் 5,500 நபர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்தார்கள். இவர்களில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்னும் 500 நபர்கள் அவர்களது சொந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2ம் தேதி இலங்கை நாட்டு கொழும்பில் இருந்து 700 நபர்களுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது. கப்பலில் வந்த பயணிகள் மருத்துவ பரிசோதனை செய்து அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாளை 07.06.2020 அன்று மாலத்தீவில் இருந்து கப்பல் மூலம் 700 நபர்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தர உள்ளார்கள்.

அவர்களை மருத்துவ பரிசோதனை செய்து, குடிவரவு நுழைவு மற்றும் உடைமைகளை பரிசோதனை செய்து, பேருந்துகளில் அவர்களது சொந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகம் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

முன்னதாக மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள், கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு பூரண குணம் பெற்ற 15 நபர்களை பழங்களை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மேலும் யோகா மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் ஆரோக்கியம் திட்டத்தின் மூலம் அமுக்கரா மாத்திரை மற்றும் நெல்லிக்காய் லேகியம், நிலவேம்பு கசாயம் ஆகியவற்றை வழங்கப்பட்டது.

-நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு அருண் பால கோபாலன், இ.கா.ப தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதிபாலன், இணை இயக்குநர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை (பொ) மரு.பொன் இசக்கி, துணை முதல்வர் மரு.கலைவாணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.செல்வகுமார், உறைவிட மருத்துவர் மரு.சைலேஸ் ஜெபமணி உதய உறைவிட மருத்துவர் மரு.ஜெயபாண்டியன், உயிர் வேதியியல் துறை பேராசிரியர் மரு சண்முகப்பிரியா, மரு. இளங்கோ மரு.ஜெயமுருகன் பிரமுகர்கள் திரு ஆறுமுக நயினார், திரு.ஏசாதுறை மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்.