ஈஸ்டர் : 40 நாட்களுக்கான நோன்பு இன்று முதல் கடைப்பிடிப்பு.!

கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான, ஈஸ்டர் பண்டிகை வருகிற ஏப்ரல் 12ம் தேதி கொண்டாடட்டுகிறது.!
தவக்காலம் தொடங்குவதால், 40 நாட்களுக்கான நோன்பு இன்று முதல் கடைப்பிடிப்பு.!

கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை ஒன்றாகும். இதையொட்டி கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்குகிறது. இன்று முதல் நோன்பு தொடங்குகிறார்கள். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3ம் நாள் உயிர்த்தெழுவதை கொண்டாடும் வகையில் உயிர்ப்பு பெருவிழாவாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை வருகிற ஏப்ரல் மாதம் 12ம் தேதி வருகிறது. இந்த பண்டிகைக்கு முன் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பு இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். அதன்படி இன்று (26ம் தேதி) கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குகிறது.

இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடைபெறும். சாம்பல் புதன் வழிபாட்டின்போது ஆயர், பங்குத்தந்தையர்கள், அருட்பணியாளர்கள் கிறிஸ்தவ மக்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு, “மனந்திரும்பு, நற்செய்தியை நம்பு” என்று கூறுவார்கள். இதற்கான சாம்பல் கடந்த ஆண்டு நடந்த தவக்கால குருத்தோலை பவனியின்போது வழங்கப்பட்ட குருத்து ஓலைகளை சேகரித்து எரித்து சாம்பல் தயாரிப்பார்கள். சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் சாம்பல் புதன் வழிபாடு நடைபெறும். சீரோ மலபார், சால்வேஷன் ஆர்மி உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சாம்பல் புதன் நிகழ்ச்சி நடைபெறும்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. புனித வாரத்துக்கு முந்தைய 40 நாட்கள் தான் தவக்காலம் ஆகும். சிலுவையில் இயேசு மரிப்பதற்கு முதல்நாள் பெரிய வியாழனாக அனுசரிக்கப்படும். அந்த நாளில் இயேசு தனது சீடர்களின் பாதங்களை கழுவி, அவர்களுடன் உணவருந்தியதை நினைவுபடுத்தும் விதமாக பாதம் கழுவும் சடங்கு நடைபெறும்.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படும். தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பார்கள். தினந்தோறும் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வீடுகளில் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் சிலுவைப்பாதை வழிபாடும் நடைபெறும். ஆலயங்களில் தவக்காலத்தில் வசூலிக்கப்படும் சிறப்பு காணிக்கை ஏழைகளின் பசி, பிணி போக்குவதற்காக பயன்படுத்தப்படும். கிறிஸ்தவர்களின் வீடுகளில் தவக்காலத்தில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது. ஆனால் ஏழை, எளியவர்களுக்கு இந்த தவக்காலத்தில் தானம், தர்மம் வழங்குவார்கள். ஏழைகளுக்கு கஞ்சி காய்ச்சி கொடுத்தல், அவர்களை வீடுகளுக்கு அழைத்து வந்து உணவு, உடையும் வழங்குவார்கள்.