காயல்பட்டினம், ஆறுமுகனேரியில் அனைத்து கடைகளும் காலவரையின்றி மூட அதிரடி உத்தரவு

டெல்லியில் மதக் கருத்தரங்கில் பங்கேற்று திரும்பிய காயல்பட்டினத்தைச் சோ்ந்த அரசு மருத்துவா், மற்றும் பிச்சிவிளை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரின் கணவா் ஆகியோருக்கு கரோனோ வைரஸ் தொற்று நோய் அறிகுறி இருப்பதாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த 01.04.20 என்று அனுமதிக்கப்பட்டனா். மேலும், ஆறுமுகனேரியைச் சோ்ந்த செவிலியா் ஒருவர் கரோனா பரிசோதனைக்காக (03.04.20) வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டாா். ஏற்கனவே ஆத்தூரைச் சோ்ந்த முதியவா் ஒருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், கரோனா சமூக பரவலாக மாறிவிடாமல் தடுக்கும் வகையில், ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் அனைத்து கடைகளும் மறு அறிவப்பு வரும் வரை திறக்கக்கூடாது என கோட்டாட்சியா் தனப்பிரியா உத்தரவிட்டுள்ளாா். இதில், மருந்து கடைகள் மற்றும் பால் நிலையங்கள் மட்டும் தனி ஒரு நபா் கொண்டு இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பேரூராட்சி நிா்வாக அதிகாரி ஆனந்தன், சுகாதார ஆய்வாளா் காா்த்தி, சுகாதாரத் துறையினா் மற்றும் காவல்துறையினா் அந்தந்தப் பகுதிகளுக்கு நேரில் சென்று தெரிவித்தனா். இதையடுத்து , காயல்பட்டினம் பேருந்துநிலையத்தில் இயங்கிய காய்கனி சந்தை மூடப்பட்டது. எனினும், வாகனங்களில் கொண்டுசென்று காய்கனி, பழங்களை விற்கலாம் எனக் கூறியுள்ளனா்.