நெல்லை – தூத்துக்குடி 4 வழிச்சாலை பாலம்

நெல்லை அருகே வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் கம்பீரமாக உழைத்த பிரிட்டிஷ் பாலத்திற்கு மாற்றாக அமைத்த நான்குவழிச் சாலை பாலம் ஓட்டை விழுந்து கந்தலாகி காட்சியளிக்கிறது. 3 மாதங்களாகியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலங்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை. ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நெல்லை தாமிரபரணி மேம்பாலம் மற்றும் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் இன்றும் சரித்திர அடையாளமாக காட்சியளிக்கின்றன. அதன் கட்டுமானங்கள் காண்போரை வியக்க வைக்கும்.

இந்நிலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கடந்த 20 ஆண்டுகளில் கட்டப்பட்ட பாலங்கள் வாகன ஓட்டிகளை அடிக்கடி பரிசோதிக்கின்றன. அதில் ஒன்றாக வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலம் திகழ்கிறது. நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலை, 47 கிமீ கொண்டதாகும். தூத்துக்குடி துறைமுகத்தையும், நெல்லை மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் கடந்த 2004ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் தங்க நாற்கர சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்காக ரூ.232 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2007ம் ஆண்டு ஒப்பந்த தொகையில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் முக்கிய சாலையில் விழுந்த ஓட்டை பல மாதங்களாக கவனிக்கப்படாமல் இருப்பது வாகன ஓட்டிகளை அதிரச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் சில சமயங்களில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து ேகாரிக்கை விடுத்தும், அதை கண்டு கொள்வாரில்லை. எனவே விபத்து ஆபத்தை உணர்ந்து நான்கு வழிச்சாலை பாலத்தை சீரமைத்து சீரான போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டியது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கடமையாகும்.