144 தடை உத்தரவு மீறி கடைகள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் : மாவட்ட அதிகாரிகள்

கரோனா பரவலை தடுக்கும் வகையில் மே 3 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தினமும் காலை 10 மணி வரை அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது. காய்கனி, மளிகைப் பொருள்கள், பழங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளைத் தவிர அத்தியாவசிய தேவை இல்லாத கடைகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் திறக்கக் கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ஆங்காங்கே பாத்திர கடைகள், தேநீா் கடைகள், முடிதிருத்தும் நிலையங்கள் திறக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகாா் வந்ததையடுத்து, அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் 3 முடிதிருத்தும் கடைகள், ஒரு பாத்திர கடை என மொத்தம் 18 கடைகளின் உரிமையாளா்களை எச்சரித்து கடைகளை அடைக்கும்படி அறிவுறுத்தினா். மீண்டும் அவா்கள் கடைகளை திறந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும், குறிப்பாக முடிதிருத்தும் கடைகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் திறக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.