தை பொங்கல்

காணும் பொங்கலும்..திருவள்ளுவர் தினமும் சிறப்பம்சம் என்ன தெரியுமா?

காணும் பொங்கலன்று உடன்பிறந்த சகோதரர்கள் நலமுடன் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது வழக்கம்.

பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இந்நாளில் உடன்பிறந்த சகோதரர்கள் நலமுடன் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது வழக்கம்.

‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பிடியும் உடன்பிறந்தானுக்கு’ என்பது பழமொழி. அதாவது கார்த்திகை மாதம் எண்ணெய் தேய்த்துக் குளித்து விளக்கு வைப்பதும், பொங்கலில் பொங்கிய பால் சாதத்தை உடன்பிறந்தவர்களின் நலத்திற்காக ’காணும் பொங்கல்’ அன்று காக்கா குருவிகளுக்கு அன்னமிடுவதும் இந்தப்பழமொழியின் விளக்கம்.

அன்றைய தினம் ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டை மாடியிலோ கோலமிட்டு, அதன்மீது இரண்டு மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் வைக்கவேண்டும். முதல் நாள் பொங்கிய சாதத்தில் மஞ்சள் பொடி தூவி மஞ்சள் சாதம் கொஞ்சம், குங்குமம் கலந்த சிவப்பு சாதம் கொஞ்சம், வெள்ளையாய் பால் சாதம் கொஞ்சம், வெல்லம் சேர்த்த சக்கரைப் பொங்கல் கொஞ்சம் லேசாய் தயிர் சேர்த்த தயிர்சாதம் என ஐந்து வகை அன்னங்களை தயாரிக்க வேண்டும்.

ஒவ்வொன்றிலும் 5 அல்லது 7 பிடி எடுத்து இலைமீது வரிசையாய் வைக்கும் போது, ‘காக்காப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம். கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம். கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்‘ என்று சொல்லிக்கொண்டே வைக்க வேண்டும். தீபம் ஏற்றிவிட்டு ஆரத்தி கரைத்து ஆற்றில் விடவேண்டும்.

மேலும் உற்றார், உறவினர், நண்பர்களைக் கண்டு வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் பரிமாறிக் கொள்ளும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. சுற்றுலாத் தலங்களுக்கும், பொழுது போக்குமிடங்களுக்கும் இந்த நாளில் போவது வழக்கம்.

திருவள்ளுவர் தினம்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர்.

1949-ல், மாநிலப் பிரிவினைக்கான குரல்கள் எழுந்த நேரத்தில், தை மாதத்தின் தொடக்க நாளை திருவள்ளூவர் ஆண்டாக மறைமலை அடிகளார் அறிவித்தார். தைத்திங்களில் தொடங்கும் திருவள்ளுவராண்டு நாட்காட்டிகளைத் தமிழ் இயக்கங்கள் பரப்பினர்.

இதனைத் தொடர்ந்து 69-ல் முதல்வராக முதல்முறை பொறுப்பேற்ற கருணாநிதி தைப்பொங்கலுக்கு மறுநாளைத் ’திருவள்ளுவர் நாள்’ என பிரகடனம் செய்து, அரசுவிடுமுறை அறிவித்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், தை மாதம் இரண்டாம் நாள் திருவள்ளூவர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தினத்தில் திருவள்ளுவரையும், திருக்குறளையும் நினைவுகூர்வோம். தமிழர்தம் பெருமையை காப்போம்!!

-tamil samayam