கருப்பட்டி தயாரிக்கும் நிறுவனங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு : தூத்துக்குடி

கோடைக்காலம் தொடங்கியதை முன்னிட்டு, பனை மரங்களில் இருந்து பெறப்படும் பதனீர் மூலம் கருப்பட்டி உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உடன்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகள் உள்ள உடன்குடி–செட்டியாபத்து ரோடு, திசையன்விளை ரோடு, கொட்டங்காடு ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கருப்பட்டி தயாரிக்கும் நிறுவனங்களில் கருப்பட்டி, கற்கண்டு உற்பத்தி செய்யப்படும் இடங்கள், குடோன்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது கருப்பட்டி தயாரிக்கும் இடத்தையும், பணி புரியும் இடத்தில் உள்ள தொழிலாளர்கள் சுத்தமாக பணியாற்ற வேண்டும். சுகாதாரமான முறையில் தரமானதாக கருப்பட்டி, கற்கண்டு போன்றவற்றை உற்பத்தி செய்ய வேண்டும். உற்பத்தி செய்யப்பட்ட கருப்பட்டி, கற்கண்டு ஆகியவற்றை பொட்டலங்களில் போடும்போது அதில் தயாரிப்பு தேதி, நிறுவன உரிமம் எண், அவற்றில் சேர்க்கப்பட்ட பொருட்களின் விகிதாசாரம் குறித்து லேபிளில் தெளிவாக அச்சிட்டு ஒட்டிய பின்னரே விற்பனைக்கு அனுப்ப வேண்டும் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தினார். ஆய்வின் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.