சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் வல்லநாட்டில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் மணிமண்டபத்தில் அன்னாரது 251வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் செய்தி மககள் தொடர்புத்துறை மூலம் அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று (31.05.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  வீரன் வெள்ளையத்தேவன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் 251வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. 
கடந்த முறை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தபோது ஊர் பொதுமக்கள் மற்றும் வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் உறவினர்கள் அவருக்கு முழு உருவ வெண்கல சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இந்த கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வீரன் வெள்ளையத்தேவன் அவர்களுக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்று சட்டப்ரேவையில் அறிவித்தார்கள். அடுத்து ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு முன்பு இங்கு வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் முழு உருவ வெண்கல திருவுருவ சிலை அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் இதுவரை 11,892 நபர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை 216 நபர்களுக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நிறைய நபர்கள் குணம் வீடு திரும்பி செல்கிறார்கள். மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து வருகை தருபவர்கள்தான் அதிக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்க நமது மாவட்டத்தில் 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் இன்று பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார்கள். அவை நாளை முதல் அமலுக்கு வரும். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மண்டலமாக பிரிக்கப்பட்டு மாவட்டங்களில் பொது போக்குவரத்து இயக்குவதற்கு அனுமதி அளித்துள்ளார்கள். தூத்துக்குடி டெப்போ மூலம் 180 பேருந்துகள் வரை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், கருங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கோமதிராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்புலட்சுமி, வெங்கடாசலம், வல்லநாடு ஊராட்சி தலைவர் சந்திராமுருகன், ஒன்றியக்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் வம்சாவழி மாரிமுத்து,ஊராட்சி செயலர் சங்கர், முக்கிய பிரமுகர் அகரம் நயினார் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.